வாகன ஓட்டிகளை அச்சுறுத்தம் அரசியல் கட்சி பேனர்கள்

மதுராந்தகம், மே 21–

மதுராந்தகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள, த.வெ.க., கட்சியின் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் பேருந்து நிலையம், தேரடி தெரு, உக்கம் சந்த் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கிய பகுதிகளில், த.வெ.க., கட்சியினர் அனுமதியின்றி அதிகளவில் பேனர்களை வைத்துள்ளனர்.

தற்போது கோடை மழைக்காலம் என்பதால் அவ்வப்போது பலத்த காற்று வீசுகிறது. இந்த பேனர்களால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும், பேனர் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடைகள் வைத்து நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். கடந்த, 10 நாட்களாகவே இந்த பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. பொதுவாக பிளக்ஸ் பேனர்கள் வைக்க முறையான அனுமதி பெற்றாலும், அவை, 2 அல்லது, 3 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

ஆனால், மதுராந்தகத்தில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது சட்ட விதிகளுக்கு புறம்பானது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement