‘ஆன்லைன்’ மருந்து விற்பனை தடுக்க கோரி மருந்து கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மே 21–

திருவள்ளூர் ரயில் நிலைய அருகே தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் ‘ஆன்லைன்’ மருந்து விற்பனையை தடுக்க கோரி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 1,300 மருந்து கடைகள் உள்ளன. தமிழகம் முழுதும், ‘ஆன்லைன்’ மருந்து வணிகத்தை தடுக்க கோரி, நேற்று ஒரு நாள் அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலும், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், ‘ஆன்லைன்’ மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி, மருந்தகங்கள் அனைத்தும் கடைகளை அடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில செயலர் அசோக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுதும் 12 லட்சம் கடைகள் உள்ளன. அதில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள், நேற்று மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள, 50,000 கடைகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், 1,300 கடைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், வலி நிவாரணி மற்றும் துாக்க மாத்திரைகளை, ‘ஆன்லைன்’ மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்து விற்பனையில், முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்தும் விதமாக, போலி மற்றும் தரமற்ற மருந்து விற்பனையை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement