ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஏஐ, டிரோன், சிசிடிவி பயன்பாடு: மத்திய அரசு முடிவு

1

புதுடில்லி: ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ஏஐ, டிரோன் மற்றும் சிசிடிவியை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


டில்லியில் ரயில்வே பவனில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இணை அமைச்சர்கள் சோமண்ணா, ரவ்னீத் சிங் பிட்டி, ரயில்வே வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில், கடந்த சில நாட்களாக ரயில்களில் ஏற்பட் ட தீவிபத்து குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவங்களின் பின்னணியில் சில சமூக விரோத சக்திகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால், ரயில் பயணிகள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் அல்லது செயல்கள் குறித்து தெரியவந்தால் உடனடியாக ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


பல சம்பவங்களில்,ரயில்வேயின் உடனடி மற்றும் துரிதமான நடவடிக்கைகள் காரணமாக பல ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு உள்ளதால், தகவல் அமைப்புகளை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், ரயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரயில் கட்டமைப்புகளில் சிசிடிவி பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சைபர் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், கேமராக்களின் தரத்தை உயர்த்தவும், ஏஐ அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு மற்றும் டிரோன் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement