வேலுாரில் கஞ்சா பதுக்கி விற்ற ஐ.டி. ஊழியர் கைது

வேலுார்: வேலுாரில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த ஐ.டி.,ஊழியர் கைது செய்யப்பட்டார்.

வேலுார் சத்துவாச்சாரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணா,30; பி.இ., பட்டதாரியான இவர், தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் ஆந்திர மாநிலம், புங்கனுார் பகுதிக்கு நேரடியாக சென்று கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து வாலிபர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும், ஒரு சில நேரங்களில் கொரியரில் கஞ்சாவை வரவழைத்தார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணா வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் சுமார் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கிருஷ்ணா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்பனை சம்பந்தமாக ஆந்திர மாநிலம், சித்துார் மற்றும் செங்கல்பட்டு அருகே உள்ள பாலுார் போலீஸ் நிலையங்களில் கிருஷ்ணா மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கிருஷ்ணாவின் தந்தை சென்னையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement