வேகத்தடை அமைக்கப்படாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பொன்னேரி: மேட்டுப்பாளையம் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், வேகத்தடைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

பொன்னேரி – மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், மேட்டுப்பாளையம் சந்திப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பஜார் பகுதியில், அனுப்பம்பட்டு – மேட்டுப்பாளையம், சிறுவாக்கம் – மேட்டுப்பாளையம், பொன்னேரி – மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையின் இருவழிச்சாலை என மொத்தம் நான்கு சாலைகள் சந்திக்கின்றன.

இதில், பொன்னேரி – மீஞ்சூர் சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவிலும், அசுரவேகத்திலும் பயணிக்கின்றன.

அனுப்பம்பட்டு, சிறுவாக்கம் பகுதிகளில் இருந்து, பிரதான சாலைக்கு வரும் வாகனங்களும் வேகமாக பயணிக்கும்போது, ஒன்றோடு ஒன்று மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகளிடையே தகராறும் ஏற்படுகிறது.

மேலும், பொன்னேரி – மீஞ்சூர் சாலையில் வேகமாக பயணிக்கும் வாகனங்களால், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

விபத்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேட்டுப்பாளையம் பகுதியில் பொன்னேரி – மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையின் இருவழி சாலையிலும், வேகத்தடைகள் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement