சென்னையில் அதிரடி! ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது; போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது

4

சென்னை: சென்னையில் நேற்று நடந்த அதிரடி வேட்டையில், போதைப் பொருட்கள் விற்பனை கும்பலை சேர்ந்த, 101 பேர், 133 ரவுடிகள் என, மொத்தம் 234 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், போதைப்பொருட்களை கட்டுப்படுத்தவும், ரவுடிகளை ஒடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் நேற்று நடந்த சிறப்பு வேட்டையில், 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பல்வேறு காவல் நிலையங்களில் பழைய குற்றவாளிகள்.

மேலும், போதைப் பொருட்கள் விற்பனை கும்பலை சேர்ந்த, 101 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து, 21.4 கிலோ கஞ்சா, 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் எச்சரித்துள்ளார்.

இதேபோல் தாம்பரம் பகுதியில், நேற்று முன்தினம் நடந்த அதிரடி வேட்டையில், பழைய குற்றவாளிகள், போதை கும்பலை சேர்ந்த, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்பில் 5 பேர் ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருபநிதி, மீனம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கண்ணகி ஆகிய, ஐந்து பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement