10ம் வகுப்பு தேர்வு மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீத தேர்ச்சி பெரம்பூர் பள்ளி மாணவி கிரத்தி மாயா ஸ்ரீ முதலிடம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த, 89 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட தேர்ச்சி, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், 46 உயர்நிலைப்பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2025 - 26 கல்வியாண்டில் நடந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், 3,570 மாணவர்கள், 3,511 மாணவியர் என, 7,081 பேர் தேர்வு எழுதினர்.

இதில், 3,115 மாணவர்கள் என, 87.25 சதவீதமும், 3,156 மாணவியர் என, 89.88 சதவீதம் என மொத்தம், 6,271 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில், 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டை விட, 3 சதவீதம் அதிகம்.

பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.கிரத்தி மாயா ஸ்ரீ, 495 மதிப்பெண் பெற்று, மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றுள்ளார். எம்.எம்.டி.ஏ., உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.ஆனந்தி, 494 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

பாட வாரியாக, தமிழ், கணிதம் பாடத்தில் தலா ஒரு மாணவர், அறிவியல் பாடத்தில் ஆறு மாணவர்கள், சமூக அறிவியல் பாடத்தில் ஐந்து மாணவர்கள் என, 13 மாணவ - மாணவியர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பெண் அடிப்படையில், 451 மதிப்பெண்களுக்கு மேல், 153 பேர்; 401 முதல் 450 மதிப்பெண்கள் வரை, 578 பேர்; 351 முதல் 400 மதிப்பெண்கள் வரை, 115 மாணவ - மாணவியரும் பெற்றுள்ளனர்.

அதேபோல், 17 உயர்நிலைப் பள்ளிகள், 5 மேல்நிலைப் பள்ளிகள் என, 22 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநில அளவில் தேர்ச்சி, 94.31 சதவீதமாக உள்ளது. மாநகராட்சி உள்ளிட்ட அரசு பள்ளிகளின் தேர்ச்சி, 86.25 சதவீதம். இதில், சென்னை மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி 89 சதவீதமாக உள்ளது.

மாநில அளவில் உள்ள, 139 மாநகராட்சி பள்ளிகளில், 35 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

படித்து கொண்டே இருப்பேன்! எனக்கு தந்தை கிடையாது. அம்மா, அண்ணன் மட்டும் தான். அண்ணன்தான் என்னை படிக்க வைக்கிறார். அதனால், தினமும் காலை, மாலை நேரங்களில் ஒரு இலக்கை வைத்து படித்துகொண்டிருந்தேன். அதனால், மாநகராட்சி பள்ளி அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசை. குடும்பத்தின் நிலையை மேம்படுத்துவேன். - ஜி.கிரத்தி மாயா ஸ்ரீ, முதல் மதிப்பெண் பெற்ற மாணவி.

கோவிலில் தான் படித்தேன் எனக்கு தந்தை கிடையாது. அம்மா தான் வீட்டு வேலை பார்த்து என்னை படிக்க வைத்து வருகிறார். தனியாக டியூஷன் செல்ல என்னிடம் பணம் இருக்காது. ஆனால், கிடைக்கும் நேரங்களில் வீடு, கோவிலில் படித்து தேர்ச்சி பெற்றேன். மாநகராட்சி பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சியை தருகிறது. ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்பது ஆசை. அந்த இலக்கை நிச்சயம் அடைவேன். - எம்.ஆனந்தி, இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி.

@block_B@

முதல் 5 மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியர்

பள்ளியின் பெயர் மாணவர்கள் பெயர் மதிப்பெண் பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜி.கிரத்தி மாயா ஸ்ரீ 495 எம்.எம்.டி.ஏ., உயர்நிலைப்பள்ளி எம்.ஆனந்தி 494 மடுவின்கரை மேல்நிலைப்பள்ளி எஸ்.ஓவியா 489 கீழ்ப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி எஸ்.தட்சிணாமூர்த்தி 489 பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எம்.அஷ்மிதா 488 ஸ்ட்ராஹன்ஸ் சாலை உயர்நிலைப்பள்ளி எஸ்.சரவண விஜய் 487 புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப்பள்ளி எம்.பிரியதர்ஷினி 487block_B

Advertisement