பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுநாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் 15ம் இடம்

நாமக்கல்:பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டம், 96.01 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 15ம் இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விபரங்களை வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மார்ச், ஏப்., மாதத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 292 பள்ளிகளை சேர்ந்த, 9,630 மாணவர்கள், 8,782 மாணவியர் என, மொத்தம், 18,412 பேர் தேர்வெழுதினர். அதில், 9,124 மாணவர்கள், 8,553 மாணவியர் என, மொத்தம், 17,677 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 94.75, மாணவியர் தேர்ச்சி சதவீதம், 97.39 என, மொத்தம், 96.01 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட, 1.49 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை காட்டிலும், மாணவியர், 2.64 சதவீதம் அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில், 162 அரசு பள்ளிகளில், 10,202 பேர் தேர்வெழுதினர். அவர்களில், 4,660 மாணவர்கள், 4,970 மாணவியர் என, மொத்தம், 9,630 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 94.39 சதவீதம். கடந்தாண்டைவிட, 2.11 சதவீதம் அதிகம். 2025ல், 115 பள்ளிகள், 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்தாண்டு, 122 பள்ளிகள், நுாற்றுக்கு நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டை காட்டிலும், ஏழு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
2025ல், 40 அரசு பள்ளிகள், 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு, 56 பள்ளிகள், 100க்கு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், மாநில அளவில், 2024-25ல், 19ம் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டம், நடப்பு, 2025-26ல், 4 இடம் முன்னேறி, 15ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.கடைசி 10 இடம் பெற்ற பள்ளிகள்நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 162 அரசு பள்ளிகளில் கடைசி, 10 இடங்களை பிடித்த பள்ளிகள் விபரம் வெளியாகி உள்ளது. அந்த பள்ளிகள் மற்றும் தேர்ச்சி சதவீதம் வருமாறு:
ராசிபுரம், அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, 75, காரைக்குறிச்சிபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, 75.68, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 77.55, அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 79.59, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையம் உயர்நிலைப்பள்ளி, 80.95, பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 81.48, உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 82.05, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 82.73, ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, 83.33, சவுதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, 84.04. இதில், ராசிபுரம் அண்ணாசாலை, காரைக்குறிச்சிப்புதுார், ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளிகள், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், கடைசி பத்து இடங்களை பிடித்த பள்ளிகளில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement