கிராவல் மண் லாரி கவிழ்ந்து விபத்து லாரி டிரைவர் படுகாயம்

திருத்தணி: திருத்தணி அருகே கிராவல் மண் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை நொச்சிலி மாநில நெடுஞ்சாலை வழியாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து அரசு அனுமதியின்றி இயங்கும் கிராவல் மண் குவாரியில் இருந்து, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கிராவல் மண் ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் திருவள்ளூர் மற்றும் சென்னைக்கு செல்கின்றன.

இதனால், நொச்சிலி சாலை பல கோடி ரூபாய் செலவில் சீரமைத்தும் தற்போது சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை கிராவல் மண் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று திருத்தணி அடுத்த, வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் சாலை வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துகுமரன், 47, படு காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement