திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உரிமங்களுக்கு டெண்டர் வரவேற்பு

மாமல்லபுரம்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரசாதங்கள் விற்பனை உரிமம் உள்ளிட்ட உரிமங்களுக்கு டெண்டர், பொது ஏலம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த, திருப்போரூரில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பசலி ஆண்டு 1436ல், வரும் ஜூலை 1 முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, பல்வேறு சேவை உரிமங்கள் வழங்க, டெண்டர், பொதுஏலம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தலா 20 லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகையுடன், பிரசாதங்கள் விற்பனை, காணிக்கை தலைமுடிகள் ஆகியவற்றுக்கான உரிமம் வழங்கப்படுகிறது.

அதேபோல் 10 லட்சம் ரூபாய் முன்வைப்பு தொகையுடன், நெய்தீபம் விற்பனை, காணிக்கை ஆடுகள், சேவல்கள் சேகரிப்பு ஆகிய உரிமங்களுக்கு, வரும் ஜூன் 3ம் தேதி, ஏலம் நடத்துவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், 2 லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகையுடன், கோவில் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கு ஏலம் நடத்தப்படுகிறது.

தலா 50,000 ரூபாய் முன்வைப்புத் தொகையுடன், முக்கிய உத்சவ நாட்கள், மாத பரணி, கிருத்திகை நாட்களில், கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் தற்காலிக கடைகளுக்கு, வாடகை வசூல் செய்வது உள்ளிட்டவற்றிற்கு உரிமை வழங்கப்படும்.

மேலும் 10,000 ரூபாய் முன்வைப்புத் தொகையுடன், சேவார்த்திகள் செலுத்தும் உப்பு, மிளகு சேகரிப்பு ஆகியவற்றுக்கும், அதேநாளில் டெண்டர், பொதுஏலம் நடத்துவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement