ஆப்ரிக்காவில் 'எபோலா' வைரஸ் கர்நாடக சுகாதாரத்துறை 'அலெர்ட்'

பெங்களூரு: ஆப்ரிக்காவின் சில நாடுகளில், 'எபோலா வைரஸ்' பரவுவதால், கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகும்படி, அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

ஆப்ரிக்காவின் எபோலா வைரஸ் பரவுகிறது. எனவே, கர்நாடக சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது.

தற்போது ஆப்ரிக்காவின், காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் அதிகம் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், நம் நாட்டில் இதுவரை வைரஸ் தென்படவில்லை என்பது, ஆறுதலான விஷயம்.

எபோலா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இதுவரை மத்திய அரசிடம் இருந்து, எந்த புதிய உத்தரவு ஏதும் வரவில்லை. ஒருவேளை, வழிகாட்டு நெறிமுறைகள் வந்தால், மாநில அரசு உடனடியாக செயல்படுத்தும்.

வரும் நாட்களில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டுமானால், சர்வதேச பயணியரை பரிசோதனை செய்வது அவசியம். ஆப்ரிக்காவில் இருந்து, குறிப்பாக காங்கோ மற்றும் உகாண்டாவில் இருந்து, இந்தியாவுக்கு வருவோர், தீவிரமாக கண்காணிக்கப்படுவர்.

மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக உத்தரவு வந்தவுடன், விமான நிலையங்களில் கண் காணிப்பு பலப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement