நீட் தேர்வு வேண்டாம் முதல்வர் சித்து விருப்பம்

பெங்களூரு: ''இனிமேல் நீட் தேர்வு நடத்த வேண்டாம். மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை மாநிலங்களின் பொறுப்பில் விட வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில், இளைஞர் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். இதில், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, அமைச்சர்கள் ஷரணபிரகாஷ் பாட்டீல், சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நீட் தேர்வு விஷயத்தில், பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் என்ற அர்த்தம் கொண்ட ஆங்கில வாசகங்கள் அடங்கிய, 'டீ - ஷர்ட்'டுகளை முதல்வர் சித்தராமையா வெளியிட்டார்.

இதையடுத்து, அவர் பேசியதாவது:

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானே பொறுப்பு.

இந்த விவகாரத்தில் அவரோ, பிரதமர் மோடியோ யாரும் பொறுப்பேற்கவில்லை.

தர்மேந்திர பிரதான், உடனடியாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மாணவர்களிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்; அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இனிமேல், நீட் தேர்வு நடத்த வேண்டாம். மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை மாநிலங்களின் பொறுப்பில் விட வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வில், இதுவரை 5 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement