மணல் கடத்திய 8 பேர் கைது: 8 லாரிகள் பறிமுதல்
பண்ருட்டி: மணல் கடத்திய 8 பேரை கைது செய்த போலீசார், 8 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மணம் தவிழ்ந்த புத்துார், பலாப்பட்டு, அம்மாபேட்டை ஆகிய 3 கிராமங்களில் நிலத்தில் உள்ள சவுடு மண் அகற்ற பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி உள்ளது.
அனுமதியின் பேரில் இப்பகுதியில் உள்ள நிலங்களில் உள்ள சவுடு 1 மீட்டர் அளவிற்கு தான் எடுக்க வேண்டும். ஆனால், 40 அடி ஆழத்தில் சவுடு மண்ணுக்கு கீழ் உள்ள மணலை, அள்ளி கடந்த ஒரு மாதமாக விற்பனை செய்யும் பணி தொடர்ந்து வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம், அருகில் உள்ள விவசாய நிலங்கள் வீணாகும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்றவர்கள் தொடர்ந்து நிலப்பகுதியில் 30 அடி ஆழத்திற்கு கீழ் மணல் எடுத்து விற்பனை செய்து வந்தனர்.
நேற்று மணல் ஏற்றிக்கொண்டு லாரிகள் பண்ருட்டி வந்தன. கடலுார் எஸ்.பி. தனிப்படை போலீசார் குழுவினர் மற்றும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் திருவதிகை பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் நேற்று காலை ஈடுபட்டனர்.
அப்போது, சோதனையில் அனுமதியின்றி மணல் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று 8 டிப்பர் டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார், புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவர் மோகன்ராஜ்,21; திண்டிவனம் முலத்துார் பகுதியை சேர்ந்த பாலாஜி,32; விக்கிரவாண்டியை சேர்ந்த அரவிந்த்,27; பண்ருட்டி பாவைக்குளத்தை சேர்ந்த பாலமுருகன்,44; வான்பாக்கத்தை சேர்ந்த மாயக்கண்ணன்,38; மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த பாபு,36; விலங்கல்பட்டை சேர்ந்த சங்கர்,48; வானுாரை சேர்ந்த கார்த்திகேயன்,35; ஆகிய 8 டிரைவர்கள் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில் 'சவுடு மண் எடுக்க அனுமதி உள்ளது. ஆனால் ஆழமாக மணல் எடுத்துக்கொண்டு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல அனுமதியில்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.