கொளுவூர் ஆதி நாகநாதர் கோயில் வசந்த உற்ஸவம்: மே 30ல் பூக்குழி இறங்குதல்

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் திருக்கொளுவூர் ஆதி நாகநாதர் கோயில் வசந்த உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நயினார்கோவிலில் இருந்து 8 கி.மீ.,ல் உள்ள திருக்கொளுவூர் கிராமத்தில் ஆதி நாகநாதர் கோயில் உள்ளது. இங்கு மூலவர் பழமை மாறாமல் புற்றடி மணலில் வீற்றிருக்கிறார். அனைத்து வகையான பரிகாரங்களுக்கும் புற்றடி மண் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. கூவிளபுறம் என பெயர் பெற்றதும், கூன் பாண்டிகளுக்கு கூனலைத் தீர்த்ததும், அவர் கோயில் முன்பு குளம் வெட்டும் போது தங்க கொளுக்கள் கிடைக்கப்பெற்றதால் இத்தலம் திருக்கொளுவூர் என பெயர் பெற்றது.

கோயிலில் கொடியேற்றத்துடன் வசந்த விழா துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் அருள் பாலிக்கிறார். மே 29 மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், மறுநாள் மாலை 5:00 மணிக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. மே 31 பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். ஏற்பாடுகளை பரம்பரை இனாம் டிரஸ்டி ஸ்தானீகம் குமாரசாமி பட்டர், மணிகண்டன் பட்டர் செய்து வருகின்றனர்.

---

Advertisement