ஆவின் பால் வினியோகஸ்தர்கள்... குமுறல் பெட்டிக்கு 4 பாக்கெட் கொள்ளை?

கோவை, ஆவின் பால் வினியோகத்தில் லோடுமேன்களும் டிரைவர்களும் இஷ்டப்படி பால் பாக்கெட்களை எடுத்துக்கொள்வதாக வினியோகஸ்தர்கள் குமுறுகின்றனர்.



கோவை மாவட்டத்தில் தினமும் 1.20 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 90 ஆயிரம் லிட்டர் பால் பெறப்படுகிறது.

கோவை ஆவின் மூலம் தினமும் 2.14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூருக்கு 40 ஆயிரம் லிட்டரும், ஊட்டிக்கு 16 ஆயிரம் லிட்டரும் அனுப்பப்படுகிறது. 33 வாகனங்கள் மூலம் 700-க்கு மேற்பட்ட ஏஜென்டுகளுக்கு அதிகாலை 3 மணி முதல் பால் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பால் பெட்டியிலும் 24 பாக்கெட் பால் இருக்க வேண்டும். ஆனால், 20 அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாக ஏஜென்டுகள் கூறுகின்றனர். வடவள்ளி, ஒண்டிப்புதூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், திட்டமிட்டு பால் பாக்கெட்டுகள் திருடப்படுவதாகவும், அதிக சேதமடைந்த பாக்கெட்டுகளே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

'தினமும் 7 முதல் 8 பெட்டி பால் கொள்முதல் செய்கிறோம். இதில் பெட்டிக்கு 4 முதல் 5 பாக்கெட் லோடுமேன்களே எடுத்து கொள்கிறார்கள். கேட்டால், 'ஏத்துக்கூலி, இறக்கு கூலி யார் தருவது?' என்று கேட்கிறார்கள். இதுபோக, தினமும் 8 பால் பாக்கெட் வரை ஓட்டை விழுந்து சேதமாகி தரப் படுகிறது.

இதனால் எங்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. எங்கள் குமுறல்களை ஆவின் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டால், அதிகாரிகள் பதிலே சொல்வதில்லை,'என்றார் ஒரு ஏஜன்ட்.

மற்றொரு ஏஜென்ட் கூறுகையில், 'தினமும் ஒரு லிட்டர் பாலை லோடுமேன்கள் எடுத்து விடுகின்றனர். மேலும் 1 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை பால் பாக்கெட்டுகள் டேமேஜ் ஆகிறது. டிரைவரிடம் கேட்டால், 'அதிகாரிகளிடம் கேளுங்கள்' என அலட்சியமாக கூறுகின்றனர். தினமும் நஷ்டப்பட்டால் எப்படி தொழில் செய்வது?' என்றார்.

'திமுக அரசில் பல துறைகள் சீரழிந்தது போல ஆவின் நிர்வாகமும் மோசமாகி விட்டது; புதிய அமைச்சர் தலையிட்டு, ஊழல் அதிகாரிகளை களையெடுத்தால் மட்டுமே ஆவினை காப்பாற்ற முடியும்' என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement