வருமானத்துக்கு குறைச்சல் கிடையாது வசதி தான் இல்லை நம்ம ஸ்டேஷனில்

கோவை: கடந்த நிதியாண்டில் அதிக வருமானம் ஈட்டிய 4வது தமிழக ரயில் நிலையம் என்ற பெருமை கோவைக்கு கிடைத்துள்ளது.

முதல் 3 இடங்களில்  சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்கள் உள்ளன. கோவை நிலையத்தை 2.39 கோடி பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். அதன் மூலம் ரூ.368 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் வருமானத்துக்கு ஏற்ற வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுகிறார்கள்.

இது குறித்து கொங்கு குளோபல் இயக்குநர் சதீஷ் கூறியதாவது:

கோவை ரயில் நிலையத்தில் 6 பிளாட்பார்ம், 2 பிட்லைன்கள் உள்ளன. அதிக வருவாய் வருவதால், இந்த வசதியை இரண்டு மடங்காக உயர்த்த முடியும். போத்தனூர் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கிடப்பில் உள்ளது. பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு இரவு நேரத்தில் ரயில் சேவை இல்லை. தென் மாவட்டங்களுக்கும் போதுமான ரயில்கள் இல்லை.

சென்னை - கோவை வழித்தடத்தில் தான் முதலில் வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டது. அந்த ரயிலில் 8 பெட்டிகள் தான் உள்ளன. திருநெல்வேலி, நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் 20 பெட்டிகள் உள்ளன. கோவை நிலையத்தில் பார்க்கிங், பராமரிப்பு இல்லை என்பது சிறந்த சேவைக்கு தடையாக உள்ளது.

கோவை ரயில் நிலையத்தை ரூ.600 கோடியில் மேம்படுத்துவதற்கு திட்ட அறிக்கை தயாரித்தும், பணி தொடங்கவில்லை. வடகோவை ரயில் நிலையத்தில் ஒரே ஒரு ரயில் நிற்கும்படி பிளாட்பார்ம் அமைத்துள்ளனர். குறைந்த வருவாய் வரும் ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது. கோவையை மட்டும் ஏன் இப்படி விட்டுவிட்டார்கள் என புரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement