பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிப்பதா? எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு

ஜோத்பூர்: பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், பெட்ரோல் பம்ப் டீலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் மோடி சமீபத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்து, அதை மீறினால் வினியோகத்தை நிறுத்தி விடுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் டீலர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக, பெட்ரோல் பம்ப் டீலர்கள், வினியோகஸ்தர்கள், போக்குவரத்து நலச்சங்கம் சார்பில் ஜோத்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக அந்த நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தினசரி குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என, 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாய் மொழியாகவும், 'வாட்ஸாப்' மூலமாகவும் உத்தரவிட்டு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்த வரம்புகளை தாண்டி எரிபொருள் விற்பனை செய்தால், பெட்ரோல், டீசல் வினியோகத்தை நிறுத்துவது மற்றும் விற்பனையை முடக்குவது என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டுகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனையை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

அந்த வகையில், பெட்ரோலிய பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக இதுவரை முறையான அரசாணையோ அல்லது அரசிடம் இருந்து அறிவிப்போ வெளியாகவில்லை. எனவே, எண்ணெய் நிறுவனங்கள் தனிச்சையாக விதித்துள்ள இந்த கட்டுப்பாடுகள் முற்றிலும் சட்டவிரோதமானவை. மேலும், அந்நிறுவனங்களின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பதாக விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்தது. எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கும் மனுவின் நகல்களை வழங்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement