கேரளத்தில் 2 ஏ.ஐ., மையங்கள் மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு

கொச்சி: கேரளத்தில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு இடங்களில், புதிய செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்தியா 'ஏ.ஐ., மிஷன்' மற்றும் இந்தியா வர்த்தக பிரிவுடன் இணைந்து, இந்த திட்டத்தை கேரள அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக தலா 20 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, கேரள தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி கூறியதாவது:

கொச்சியில் உள்ள கேரள ஸ்டார்ட்அப் மிஷன் டிஜிட்டல் ஹப்பில், உயிரியல் சார்ந்த ஏ.ஐ., மையமும், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் பொது பயன்பாட்டு ஏ.ஐ., மையமும் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கேரள அரசு மற்றும் 'சிந்தைடு இண்டஸ்ட்ரீஸ்', 'பிளான்ட் லிபிட்ஸ்', 'மேன் கான்கார்', 'வைத்திய ரத்தினம் அவுஷத சாலா' உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இணைந்து முதலீடு செய்ய உள்ளன.

இந்த மையங்கள் வாயிலாக, ஆண்டுதோறும் 4 கட்டங்களாக, 48 'டீப்டெக் ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், 600 பேருக்கு உயர் நிலை வேலைவாய்ப்புகள் மற்றும் 1,200 பேருக்கு, 'பயோ இன்பர்மேட்டிக்ஸ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Advertisement