கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

7

மதுரை: திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் பொதுநல மனு:


திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு சொந்தமாக அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிப்பது, பாதுகாப்பதில் முறைகேடு நடக்கிறது. நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சொத்துக்களுக்கு முறையற்ற வகையில் தனிநபர்களுக்கு சாதகமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. சொத்து தொடர்பான ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகள் மற்றும் கட்டுமானங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.

ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை மீட்க வேண்டும். அங்கீகாரமற்ற கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை கோரி அறநிலையத்துறை செயலர், கமிஷனர், வருவாய்த்துறை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு,'அறநிலையத்துறை உதவி கமிஷனர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். அதன் அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இக்கோயிலின் சொத்துக்களை பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Advertisement