குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்' நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
மதுரை: அரசு துறை சார்ந்த வழக்குகளில் சட்ட ஆலோசனை தரும் தமிழக குற்றவழக்குகள் துறையின் வழக்கறிஞர்கள் நியமனம், அரசு தேர்வாணையம் மூலமே செய்யப்பட வேண்டும். கட்சிக்காரர்களான வழக்கறிஞர்களை நியமித்தால் தமிழக அரசின் வெளிப்படையான நிர்வாகம் கேள்விக்குறியாகும்.
இத்துறையில் அரசு உதவி வழக்கறிஞர், உதவி குற்றவியல் வழக்கறிஞர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், கூடுதல் இயக்குநர், இயக்குநர் பதவிகளுக்கு பல ஆண்டுகளாக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல் 'சீனியாரிட்டி' அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நடைமுறை அ.தி.மு.க., ஆட்சி வரை தொடர்ந்தது.
ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியில் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. குறிப்பாக இயக்குநர் பதவிக்கு, பதவி உயர்வு அடிப்படையில் நியமனம் செய்யாமல், தனது கட்சியை சேர்ந்தவரை தி.மு.க., அரசு நியமித்தது.
இதன்பிறகு 'நிர்வாக சீர்திருத்தம்' என்ற பெயரில் பணிநியமனம், பதவி உயர்வுக்கான நடைமுறைகள் முறைகேடாக மாற்றப்பட்டன. வெளிப்படை தன்மை இல்லாமல் பணி நியமனம் நடந்தது. தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
ரூ. பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு இடமாற்றம், 'பொறுப்பு' பணி நியமனம் செய்வதாக தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் அரசிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தவிர விதிகளை மீறி சில அரசு வழக்கறிஞர்கள் துணை இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. த.வெ.க., அரசு இந்த விவகாரத்தை விசாரித்து பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்.
அரசு தேர்வாணையம் மூலமே பணி நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் துறையில் முறைகேடுகள் குறையும். இத்துறையின் மீது போலீஸ், நீதிமன்றம், பொதுமக்களிடையே நிலவும் நம்பிக்கை வலுப்பெறும்.
தினமலர் கேள்வியாய், ஆலோசனையாய் பல செய்திகளை வெளியிட்டாலும் அந்த பக்கத்தில இருந்து பது மாப்பிளைங்க வாயே திறக்க மாட்டேங்கராயங்க.