கன்னியாகுமரி நகரில் அங்கீகாரமற்ற கட்டடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி நகரில் அங்கீகாரமற்ற கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், கட்டடங்களை வரன்முறைப்படுத்த விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி சாமுவேல் பெஸ்வின் லாய் தாக்கல் செய்த பொதுநல மனு:

கன்னியாகுமரியில் சட்டவிரோத மற்றும் அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் உள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மீறப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.அங்கீகாரமற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்தக்கூடாது. அவற்றை அகற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம்,நகர் ஊரமைப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மலைராஜா ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ​கன்னியாகுமரி பேரூராட்சிநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் சட்டப்படி சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர், அதிகாரிகளால் 63 அங்கீகாரமற்ற கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆறு கட்டடங்களின் வளாகங்களை ஏற்கனவே பூட்டி சீல் வைத்துள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி, அது தொடர்பான நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வழக்கில்எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட தனிநபர்கள் தங்கள் கட்டடங்களை வரன்முறைப்படுத்த, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில், 3 மாதங்களில் பரிசீலித்து தீர்வு காண வேண்டும். விதிமீறல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து கட்டட உரிமையாளர்களும், சட்ட விதிகளின் கீழ் மனு அளிக்கலாம்.வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement