வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்

14

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசின் அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நேற்று இடம்பெற்றன. அந்த கட்சிகளை ஆபாசமாக விமர்சித்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா தெரிவித்த கருத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, கடந்த 10 ஆண்டுகளாக, தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் நீடித்தன. இந்த கூட்டணியை, 'கொள்கை கூட்டணி, இயற்கை கூட்டணி' என அந்த கட்சிகளும், தி.மு.க.,வும் பெருமையாக பேசி வந்தன.

இணைந்தன





சட்டசபை தேர்தலில், முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சி அமைத்துள்ளது.

அந்த ஆட்சிக்கு, தி.மு.க., கூட்டணியில் இருந்து முதலில் காங்கிரஸ் வெளியேறி ஆதரவு அளித்தது. பின், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என அடுத்தடுத்து ஆதரவு அளித்தன.

தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள், த.வெ.க., அரசில் இணைந்து விட்டன.

இதனால், கொள்கை கூட்டணி என கூறப்பட்ட தி.மு.க., கூட்டணி சிதைந்து விட்டது. வி.சி.க.,வைச் சேர்ந்த வன்னி அரசு, முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்று விட்டு, த.வெ.க., அரசில் இடம் பெற்றதால், முஸ்லிம் லீக்கின் ஏணி சின்னத்தையும், விடுதலை சிறுத்தை கட்சியையும் குறிப்பிட்டு, மிக ஆபாசமாக தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா விமர்சித்தார்.

அவர் சமூக வலைதள பதிவில், 'முன் ஏற தரப்பட்ட ஏணியும், மூட ஜாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும், வெறும் விசில் சத்தத்திற்கு முட்டு கொடுக்குமென்றால், பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை' என்று கூறி இருந்தார்.

பதிவு மாற்றம்




இதற்கு, பெண்கள் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்ததும், அந்த பதிவை நீக்கிவிட்டு, 'என் வீட்டு தோட்டத்து தென்னை, கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால், இலக்கியத்தில் அதற்கு பெயர் 'முடத்தெங்கு!' அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?' என, வேறு பதிவை ராஜா போட்டார்.

இந்நிலையில், ராஜாவின் ஆபாச கருத்துக்கு, வி.சி.க., காங்கிரஸ் நிர்வாகிகளும், கட்சியினரும், சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வி.சி.க., பொருளாளர் பாலாஜி, 'அதிகாரம் எளியவருக்கு, அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளி வீசும் அவதுாறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது, அநாகரிகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்' என கூறியுள்ளார்.

தமிழக காங்., பொதுச்செயலர் வசந்தராஜ் வெளியிட்ட அறிக்கையில், 'வீட்டில் வைத்த தென்னை விலை கொடுத்து வாங்கப்பட்டதா? பக்கத்து வீட்டுக்காரன் பசியாறக் கூடாது என்பது கெட்ட எண்ணம். ஊனமான மனம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் கேடு' என கூறியுள்ளார்.

பதில் தர மறுப்பு




ராஜாவிற்கு பெண்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து, ராஜாவை அழைத்து, 'சர்ச்சைக்குரிய ஆபாச கருத்துகளை வெளியிடாதீர்' என கண்டித்தார். இதற்காக, தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு வந்த ராஜாவிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதிலளிக்காமல் சென்றார்.

@block_B@ 'எவன் இருந்தா என்ன? எவன் போனா என்ன!

' தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது, அவரிடம், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியேறி, த.வெ.க., அமைச்சரவையில் சேர்ந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாரதி, ''நாங்கள் இடம் பெறாத அமைச்சரவையில், எவன் இருந்தால் என்ன; எவன் போனால் என்ன? அதை பற்றி எந்த கவலையும் இல்லை; அக்கறையும் இல்லை,'' என்றார். பாரதியின் ஏக வசன பேச்சால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோபமடைந்து, 'ஆர்.எஸ்.பாரதியின் நாவை அடக்கி வைக்கச் சொல்வது நலம். இந்த திமிர்த்தன பேச்சு எல்லாம் ஏற்புடையது அல்ல' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.block_B

@block_B@ 'கடுஞ்சொற்களால் விமர்சிக்க வேண்டாம்'

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நம் கொள்கை தோழமைகள் வன்னி அரசுக்கும், ஷாஜஹானுக்கும் வாழ்த்துகள். தங்கள் அரசியல் முடிவை தீர்மானிக்கும் உரிமை எந்த கட்சிக்கும் உண்டு. 'எனவே, தி.மு.க., வினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களை பேச வேண்டாம் என்பது, என் அன்பு வேண்டுகோள்.

'அண்ணாதுரை வழியிலும், கருணாநிதி வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறக்க வேண்டாம். நல்லதை பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்' என கூறியுள்ளார்.block_B

Advertisement