பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?

17


புதுடில்லி: பெரிய நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கும் போது அலட்சியமாக செயல்படும் வங்கிகள், சாமானியர்கள் சிறிய கடன்களை பெற முயன்றால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் ஒன்றின் சொத்துக்களை எஸ்.பி.ஐ., பறிமுதல் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு கூறியதாவது:

பெரிய நிறுவனங்களுக்கு பெருமளவு கடன்களை வழங்கும் போது, வங்கிகள் அந்நிறுவனங்களுக்கு அதிக சிரமத்தை தராமல் அலட்சியமாக செயல்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேவைகளுக்காக சிறிய கடன்களை பெறும் சாதாரண மக்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில நேரங்களில், இது எல்லை மீறிய தொந்தரவாக கூட மாறுகிறது.

கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் தேவைகளை தளர்த்த வேண்டும் என, நீதிமன்றத்தால் வலியுறுத்த முடியாது. எனினும், சாமானியர்கள் கடன் பெற விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிமையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம். இந்த வழக்கில், 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை வழங்கியதில், எஸ்.பி.ஐ., மற்றும் அதன் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.

கடன் பெற்ற நிறுவனம், தவணையை தொடங்க கூட முடியவில்லை. இதுவே, கடன் பெறுபவர்களின் திருப்பி செலுத்தும் திறனை அதிகாரிகள் சரியாக மதிப்பீடு செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதற்கான அறிகுறியாகும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement