ஜல்லிக்கட்டில் மனிதநேயம் முக்கியம்!

நாட்டு மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வரும், புதுக்கோட்டை மாவட்டம், மாத்துாரைச் சேர்ந்த, 45 வயதான கணேஷ் கருப்பையா:

எனக்கு பூர்வீகம், இதே மாவட்டத்தில் உள்ள மங்கதேவன்பட்டி. நாங்கள் விவசாயக் குடும்பம். எங்கள் மூதாதையர் இரு காளை மாடுகளை வளர்த்து வந்தனர். என் அப்பா காலம் வரை, எங்கள் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சாமி மாடுகள் என்ற பெயரில், எங்கள் மாடுகளை தான் முதலில் அவிழ்ப்பர்.

என் அப்பா, 30 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு பிரச்னையால், 'இனி மாடு அவிழ்க்க மாட்டேன்' என சபதம் போட்டார். நான் 10வது வரை படித்து விட்டு, வளைகுடா நாடான ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு வேலைக்கு சென்று, 10 ஆண்டுகள் அங்கு இருந்தேன். அதன்பின் சொந்த ஊர் திரும்பி, தொழிற்சாலைகளில் சத்தத்தை கட்டுப்படுத்தும் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிலை துவக்கினேன்.

ஒருமுறை ஒரு காளை மாட்டையும், பசு மாட்டையும் சந்தைக்கு ஒருவர் ஓட்டி வரும்போது, அந்த மாடுகள் அவரிடம் இருந்து தப்பி, என் நிறுவனத்திற்குள் ஓடி வந்தன.

அவர், 'இங்கேயே அந்த மாடுகளை கட்டி வைத்து விட்டு பின்னர் வந்து அவிழ்த்து கொள் கிறேன்' என்று கூறி செ ன்றார். திரும்பி வந்தவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 'இந்த மாடுகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி விட்டார்.

அடுத்த ஒரு வாரத்தில், பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவர் என்னை தேடி வந்து, அவருடைய காளையை வாங்க சொல்லி கேட்டார். ஆச்சரியம் தாளாமல் அந்த காளையையும் வாங்கிக் கொண்டேன். அதன்பின், மங்கதேவன்பட்டியில் சாமி மாடுகள் அவிழ்க்கும் வழக்கத்தை மீண்டும் ஆரம்பித்தேன்.

நாட்டு காளைகளை அதிகம் வளர்த்து ஜல்லிக்கட்டில் விடணும் என்று ஆசை வந்தது. இதையடுத்து ஒன்பது ஆண்டுகளில், 59 காளைகளை வாங்கியிருக்கிறேன்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடக்கக் கூடிய அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் என் காளைகள் வெற்றி பெற்று இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், வெள்ளி பொருட்கள், தங்கக்காசுகள் என்று ஏகப்பட்ட பரிசுகளை குவித்து உள்ளன.

மாடுகளை கவனிக்க ஐந்து பேரை வேலைக்கு வைத்துள்ளேன். தவிர, ஜல்லிக்கட்டுக்கு மாடுகளை பழக்க, 15 பேர் இருக்கின்றனர். சேலம், மதுரை, திருச்சி, அரியலுார் மாவட்டங்களில் என் சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறேன்.

ஜல்லிக்கட்டில் வெற்றி அடைவதும், என் காளைகள் மேல் பாசம் காட்டுவதும் மட்டுமே எனக்கு முக்கியமல்ல; மனிதநேயமும் அவசியம். அரியலுாரில் ஒருமுறை என் மாடு முட்டி, ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டது. அந்த வீரரை மருத்துவமனையில் சேர்த்து, அவருக்கு நல்லபடியாக சிகிச்சை முடிந்ததும் தான் நானும், என் மாடும் அங்கிருந்து சென்றோம்.

தொடர்புக்கு

63806 30839

Advertisement