13 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தம்: திருத்தணி மக்கள் அவதி

திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு வழங்கி வரும் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 13 நாட்களுக்கு மேலாகியும், பழுது பார்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14,000க்கம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் பகுதியில் இருந்து திருத்தணி நகராட்சிக்கு, நிலத்தில் புதைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் வழியாக திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த, 8ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே மங்கலம் பகுதியில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

திருத்தணி நகராட்சியில் கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

மேலும் நகராட்சி நிர்வாகம், கடந்த, 11 மற்றும் 18ம் தேதி வரை உடைந்த குழாயை சீரமைக்கும் பணி நடப்பதால், குடிநீர் வினியோகிக்க முடியாது என திருத்தணி நகர மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதனால், நகர மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்படுகின்றனர்.

சிலர் தனியார் டிராக்டரில் கொண்டு வரப்படும் குடிநீரை, ஒரு குடம், 8 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

எனவே, கூட்டு குடிநீரை விரைந்து வழங்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சோளிங்கர் அருகே மங்கலம் பகுதியில், ரயில்வே பாதையில் நிலத்தில் புதைக்கப்பட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. ரயில்வே பாதை என்பதால், உடனுக்குடன் பழுது பார்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தற்போது, 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இரண்டு நாட்களில் பணி முழுமையாக முடித்து, வரும் ஞாயிறு அல்லது திங்கள் முதல் சீரான குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement