60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்
சென்னை: 'பல்வேறு துறைகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது .60 நாட்களில் ஒட்டுமொத்த நிர்வாக மாற்றத்தை பார்ப்பீர்கள்,' என்று அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.
தூக்கி எறிந்துவிட்டார்கள்
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பணபலம் தூக்கியெறியப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல் அரசியலை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். ஜோசப் விஜய் என்று சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டு, மத அரசியலை தூக்கி எறிந்துள்ளார் எங்கள் தலைவர். எல்லோருக்குமான முதல்வராக ஒரு முதல்வராக எல்லா மதமும், ஜாதிகளும், இளைஞர்களும், பெண்களும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கிய போது, எங்கள் தலைவர் முதல் மாநாட்டில் சொல்லியது போல, அதன் பிறகு என்னுடைய தனிப்பட்ட முழக்கமாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை, தமிழக வரலாற்றில் இது எல்லாம் சாத்தியமா? என்று எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் குறைத்து மதிப்பிட்டு பார்த்தார்கள்.
தேர்தல் அரசியலில் முதல் மாநாட்டில் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ, அதுபோல, என்றைக்கும் இந்தியாவில் இல்லாத அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட, யார் எல்லாம் கட்சிக்கு உழைத்தார்களோ, இளைஞர்களுக்கான அமைச்சரவையை முதல்வர் உருவாக்கியுள்ளார். இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய முன்னுதாரனமான அமைச்சரவை உருவாக்கியுள்ளார்.
சமூக நீதியில்லாத அரசு
108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஜனாதிபதி ஆட்சி வந்து விடும் என்ற காரணத்திற்காக, ஜனநாயக ரீதியாக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். எங்களின் தலைவர் சொன்ன வாக்குறுதிபடி, ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற உறுதியை அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஒவ்வொரு கட்சியும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்தனர். 59 ஆண்டு கழித்து காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். விசிக 30 ஆண்டு திருமாவளவனின் முழக்கம். ஒரு அதிகாரம் ஒருவரிடம் தான் இருக்க வேண்டுமா? என்று 1999ல் முழக்கம் எழுப்பினார். 1948ல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக், இன்று வரையிலும் முன்பிருந்த அரசுகள் முஸ்லிம் சகோதரர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தது கிடையாது. தங்களின் கட்சியில் இருக்கும் முஸ்லிம்களுக்கு பெயரளவில் அதிகாரமில்லாத துறைகளை ஒதுக்கி சமூக நீதியில்லாத அரசை உருவாக்கினர். ஆனால் இன்று உண்மையான சமூக நீதி நாளாக பார்க்கிறோம்.
பதவியேற்புக்கு பிறகு, திருமாவளவன், காதர் மொய்தீனைப் பார்த்து முதல்வர், இன்று தான் அமைச்சரவை முழுமை பெற்றுள்ளது என்று அன்பை பகிர்ந்தார். இன்றைய பொறுத்தவரைக்கு ஈவேரா, அம்பேத்கர் கண்ட சமூக நீதி நாள் இன்றைக்கு தான் முழுமை பெற்றுள்ளது. தேர்தலில் வேலை செய்யும் போது, இவர் இந்த ஜாதி, அவர் இந்த ஜாதி என்று ஊடகங்கள் விவாதிக்கின்றனர்.
மக்கள் ஜாதியின் அடிப்படையில் ஓட்டுப்போடவில்லை. எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் ரமேஷின் ஜாதி பற்றி எங்களுக்கு தெரியாது. தவெகவை பொறுத்தவரையில் இளைஞர்கள், பெண்கள் தான். ஜாதி அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டது கிடையாது. தவெக வெற்றி பெறவே பெறாது என்று குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஆனால், தேர்தலில் உழைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் அனைவருக்கும் துறை ஒதுக்கியுள்ளார்.
ஒவ்வொரு முடிவும் மதச்சார்பற்ற கொள்கை, சமூக நீதியின் அடிப்படையிலும் ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு நிர்வாகிகளும் நேர்மையான முடிவுகளை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அரசு ஈவேரா, அம்பேத்கர், அண்ணா கொள்கைகளின் அடிப்படையில் நடைபெற்று இருக்கும். தேர்தல் அரசியலில் மெஜாரிட்டி இல்லாத போது, அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால், எளிதாக அரசை அமைத்திருப்போம். ஆனால், ஒவ்வொரு தோழமை கட்சியிடமும் இந்த அரசு மதச்சார்பற்ற கொள்கை, சமூக நீதியின் உறுதியாக இருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.
அடிமை சாசனம்
திமுக தலைமையில் கூட்டணிகட்சிகள் தேர்தலை எதிர்கொண்டார்கள். பொதுவாக தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி என்பது அந்தந்த கட்சியின் தலைமை முடிவு செய்யும் இடத்தில் ஜனநாயகக் கடமை இருக்கிறது. எந்தக் கட்சியும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதவில்லை. இத்தனை நாள் திமுக அனைத்து கூட்டணி கட்சிகளுக்கு அடிமை சாசனம் எழுதியதைப் பார்த்திருப்போம். திமுக தலைவரும், உதயநிதியும் தேர்தல் தோல்வியில் ஏன் தோற்றோம் என்று இன்னமும் தெரியவில்லை.
துறை சார்ந்த ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார். 50 ஆண்டு காலப் பணிகளில் எதை முதலில் சரி செய்யப்பட முடியும் என்றால், முன்பு சிஎம்டிஏவில் வீடு கட்ட சதுர அடிக்கு ரூ.40 முதல் ரூ.50 வசூலித்து வந்தார்கள். இதை ஒழித்திருக்கிறோம். கட்சி நிதி, எம்எல்ஏ நிதி, முதல்வர் குடும்ப நிதி என்பதை முதலில் ஒழித்து இருக்கிறோம்.
முன்பு கிராமப்புற பகுதிகளில் ஒரு ஏக்கர் டிடிசிபி அனுமதி பெற வேண்டும் எனில், ஒரு பெரிய குழு வந்து வசூல் செய்வார்கள். அதை ஒழித்து இருக்கிறோம். டாஸ்மாக்கில் அமைச்சருக்கான நிதி என்பதை ஒழித்திருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அனைத்து டெண்டர்களையும் மறு ஆய்வு செய்து வருகிறோம். முக்கிய துறைகளில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து 5 ஆண்டுகள் செய்த தவறுகளை பழி வாங்காமல், என்னென்ன தவறுகள் நிகழ்ந்திருக்கிறது என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அமைச்சருக்கான நிதி, அமைச்சரின் குடும்ப உறவுகளோ எந்த இடத்திலும் பணம் வசூலிப்பது கிடையாது. ஆற்று மணலை ஏற்றி முதல்வருக்கான நிதி என்பது கிடையாது. கரூரில் எங்குமே ஆற்று மணல் ஏற்றுவதில்லை.
நிர்வாக மாற்றம்
தமிழகம் முழுவதும் 11 அல்லது 12 துறைகளில் ஊழல் கடுமையாக இருக்கும். அமைச்சருக்கு ஒரு நிதி செல்லும் போது, அதிகாரிகளும் கேட்பார்கள். ஒரு குடும்பத்திற்கு 15 சதவீதம், 15 சதவீதம் அமைச்சர், அதிகாரிகளுக்கு 7 சதவீதம் என்ற 6 சதவீத வேலையை தூக்கி எறிந்துள்ளோம். நிர்வாக ரீதியாக மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 10 சதவீதமாக இருந்த சதவீதம் திமுக ஆட்சியில் 12 சதவீதமாக அதிகரிச்சாங்க. இப்போது, முதல்வர் குடும்பத்திற்கு எதுவும் கிடையாது. 60 நாட்களில் ஒட்டுமொத்த நிர்வாக மாற்றத்தை பார்ப்பீர்கள், இவ்வாறு அவர் கூறினார்.