சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு

40

சென்னை: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய, காற்றாலை ஆற்றல் திறன் அதிகரித்துள்ளது என நடிகர் கமல் பாராட்டியுள்ளார்.

இது குறித்து கமல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
என் அன்புள்ள நாட்டு மக்களே... இன்று ஈரான் போரின் தாக்கத்தால் ஆழ்ந்த கவலையுடன் ஒரு இந்தியனாக உங்களிடம் பேசுகிறேன். எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடல் வர்த்தக பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. நமது சமையலறைக்கும், வீடுகளுக்கும் தேவையான எரிசக்தி, நமது வயல்களையும் பயிர்களையும் வளர்க்கும் உரங்கள், நமது தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் இயக்கும் எரிபொருள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன.

எரிசக்தி




இதற்கு பதிலடியாக, 60க்கும் மேற்பட்ட நாடுகள் எரிபொருட்கள் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விதிகளை அமல்படுத்தியுள்ளன. சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் தம் மக்களை கடினமான காலங்களுக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். நாம் மிகப் பெரிய நாடு. நமது பிரதமர் அடுத்த ஒரு வருடத்தில் எரிசக்தியை சேமிக்கும்படி நம்மை கேட்டுள்ளார்.

இத்தகைய தருணங்களில், தேசியப் பொறுப்பு கட்சி அரசியலைத் தாண்டி உயர வேண்டும். வாஜ்பாயின் புகழ்பெற்ற வார்த்தைகளில் கூறியது போல் — “அரசுகள் வரும், போகும்... ஆனால் நாடு தொடரும்.” 1962 சீனப் போரின்போது நாம் வீடுகளில் இருந்த தங்கத்தை நன்கொடையாக அளித்தோம்.

பாராட்டுகிறேன்




1965ல் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது, லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு உணவைத் தவிர்க்கும்படி மக்களிடம் கேட்டார். இன்று இந்தியா அத்தகைய தியாகத்தை எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நாம் நிச்சயம் நமது நாட்டுக்காக சிறிய சேமிப்புகளைச் செய்ய வேண்டும். ஒரு மையவாதியாக, எனது அரசியல் கூட்டணிகளைத் தாண்டி நல்ல வேலைகளைப் பாராட்டுகிறேன். பிரதமரின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் சூரிய மற்றும் காற்று எரிசக்தி திறன் பெரிதும் அதிகரித்துள்ளது.

நடவடிக்கை




நிலக்கரி எரிவாயு மாற்றம், புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு எரிசக்தி ஆகியவற்றில் சமீபத்திய முதலீடுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் தியாகம் மக்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கப்படக் கூடாது. அரசுகளும் பங்கு வகிக்க வேண்டும்.

எனவே பிரதமரை அனைத்து முதலமைச்சர்களுடனும் தேசிய உச்சி மாநாடு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நெருக்கடி




பெட்ரோல், டீசலில் உள்ள VAT உள்ளிட்ட மாநில வரிகளை குறைக்க வேண்டும். ரயில், மெட்ரோ, பஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும். இதனால் மக்கள் தனியார் வாகனங்களை விட்டு பொதுப் போக்குவரத்துக்கு மாறலாம்.

இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளை இந்தியாவை வலுப்படுத்தும்.
சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி எண்ணெயும் ஏழை இந்தியரை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கும். இந்த நெருக்கடியை ஒன்றாக எதிர்கொண்டால், இந்தியா வலுவாக வெளிவரும். இவ்வாறு கமல் பேசி உள்ளார்.

Advertisement