மண் திட்டுகளால் துார்ந்த நகரீஸ்வரர் கோவில் குளம்
காஞ்சிபுரம்: மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்தும் துார்ந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் மேட்டு தெரு நகரீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மேட்டு தெருவில், நகரீஸ்வரர் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் குளத்து நீரை எடுத்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்தனர். பின், முறையான பராமரிப்பு இல்லாமல் குளம் சீரழிந்தது.
கடந்த 2002ம் ஆண்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் குளம் புதுப்பிக்கப்பட்டது. அப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கிய இக்குளம், தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால், மண் திட்டுகள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.
எனவே, நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் நகரீஸ்வரர் கோவில் குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.