காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை முனையமாக உருவாக்க கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை, ரயில்வே முனையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
காஞ்சிபுரம், சென்னையின் ஒரு பகுதியாகவும், சென்னையின் துணை நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பரப்பளவு விரிவடைந்திருந்தாலும், மற்ற மெட்ரோ பெருநகரங்களை ஒப்பிடும்போது, சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் என, மூன்று ரயில் முனையங்கள் மட்டுமே உள்ளன.
இதில், தென்சென்னையில் மட்டும் தாம்பரம் முனையம் அமைந்துள்ளதால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சென்னை பெருநகர் மேற்கு பகுதியில், ஒரு ரயில்வே முனையம் அவசியமாக உள்ளது.
சென்னை பெருநகர எல்லைக்குள், மேற்கு பகுதியில், செங்கல்பட்டு –- அரக்கோணம் சந்திப்புகளுக்கு இடையே, தென்தமிழகத்தையும், வட இந்திய பகுதிகளையும் இணைக்கும் வழித்தடமாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் உள்ளது.
எனவே, காஞ்சிபுரத்தை ரயில்வே முனையமாக உருவாக்கினால், சரக்கு ரயில் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் மற்றும் பன்னாட்டு விமான சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கும் உறுதுணையாக இருக்கும்.
எனவே, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை, ரயில் முனையமாக உருவாக்க, இந்திய ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.