அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை சிறப்பு முகாம் நிறைவு
காஞ்சிபுரம், மே 23-–
அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கோடை சிறப்பு முகாமின் நிறைவு விழா, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், நேற்று நடந்தது. அதில், மாணவர்களின் கலை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவ- – மாணவியருக்கான ‘வல்லமை தாராயோ’ என்ற தலைப்பிலான கோடை சிறப்பு முகாம் நடந்தது. சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ‘வல்லமை தாராயோ’ கோடை சிறப்பு முகாமின் நிறைவு விழா, கலெக்டர் சினேகா தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், மாணவ- – மாணவியர் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கலை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றை பார்வையிட்ட கலெக்டர், மாணவ- – மாணவியரின் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.
பின், ‘வல்லமை தாராயோ’ கோடை சிறப்பு முகாம் – -2026 விழா மலரை வெளியிட்டு, கோடை சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவ- – மாணவியர், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
கோடை சிறப்பு முகாமில், 376 மாணவ- – மாணவியர் பயிற்சி பெற்று பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நளினி, பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ- – மாணவியர் பங்கேற்றனர்.