பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் துாக்கிட்டு தற்கொலை
வளசரவாக்கம்: பாலியல் புகாரில் சிக்கிய, சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த மருத்துவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் வீரப்பா நகரை சேர்ந்தவர் உல்லாஸ் 59; டாக்டர். இவர், முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி மோனா, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.
உடல்நலக்குறைவால், 15 நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த உல்லாஸ், நேற்று தன் வீட்டின் படுக்கையறையில், சுயநினைவின்றி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள், அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். பின், ஆம்புலன்ஸ் வாயிலாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
முதலில் அவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததால், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என, மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, உல்லாசின் மனைவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, கணவர் உல்லாஸ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்ற அச்சத்தில், தன் குடும்ப கார் ஓட்டுநர் சதீஷ், படுக்கையில் உயிரிழந்ததாக தவறாக கூறியதாகவும் தெரிவித்தார்.
விசாரணையில், 2024ம் ஆண்டு மருத்துவமனையில் உல்லாஸ் பணியாற்றியபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனலட்சுமி என்ற தொழில்நுட்ப பணியாளர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கு, தற்போது மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, உல்லாஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
***