டில்லியில் மே 26ல் குவாட் கூட்டமைப்பு மாநாடு; இந்தோ - பசிபிக் சூழலை விவாதிக்க முடிவு

புதுடில்லி: டில்லியில் வரும் 26ம் தேதி, 'குவாட்' எனப்படும் நான்கு நாடுகளின் மாநாடு நடக்க உள்ளது. அதில் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சூழல் மற்றும் மேற்காசிய போரின் தாக்கம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய முக்கிய கூட்டமைப்பு, 'குவாட்' எனப்படுகிறது. இக்கூட்டமைப்பு இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

'குவாட்' கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு தற்போது இந்தியா வசம் உள்ளது. எனவே டில்லியில் வரும் 26ம் தேதி 'குவாட்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இந்த மாநாட்டிற்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை ஏற்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இவர்கள் மாநாட்டிற்கு பின் பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.மாநாடு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: 'குவாட்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் நடைபெறும்.

கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற விவாதங்களை தொடர்ந்து இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.'குவாட்' நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம், இந்தோ - -பசிபிக் பிராந்தியத்தின் சமீப நிலவரங்கள் இந்தக் கூட்டத்தில் முன்னுரிமை பெறும்.

மேலும், மேற்காசிய போர் உள்ளிட்ட சர்வதேச அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும்.
கூட்டத்திற்கு இடையே ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement