பாகிஸ்தானுக்கு ரகசிய உளவு பார்த்தவர் கைது! ராணுவ நடமாட்டத்தை நோட்டம் விட்டது அம்பலம்

1

பதான்கோட்: பஞ்சாபின் பதான்கோட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி, நம் ராணுவ நடமாட்டம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு நேரடியாக அனுப்பிய நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், நம் நாட்டின் முக்கிய ராணுவ மண்டலம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் உள்ளன.

சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான ராணுவ தளவாடங்களும் பதான்கோட்டில் இருந்தே செல்கின்றன.


சந்தேகம்





இதனால், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஜம்மு மற்றும் பதான்கோட்டை இணைக்கும் நெடுஞ்சாலை ராணுவ போக்குவரத்துக்கு மிக முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தின் ஒரு பகுதி, தேசிய நெடுஞ்சாலை - 44ன் கீழ் வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில், சுஜான்பூர் பகுதியில் பாலம் ஒன்றின் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இது, பஞ்சாப் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அங்கு நிறுவப்பட்ட கேமரா, இணையதளத்துடன் இணைக்கப்பட்டு நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது சந்தேகத்தை அதிகரித்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பதான்கோட் மாவட்டம் சக் தாரிவால் கிராமத்தை சேர்ந்த பல்ஜித் சிங், இந்த கேமராவை பொருத்தியதும், இதன் வாயிலாக நம் நாட்டு ராணுவ நடமாட்டம் தொடர்பான காட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியதும் உறுதியானது. பல்ஜித் சிங் கைது செய்யப்பட்டார்.

ரூ.40,000 இது குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த ஜனவரியில், தேசிய நெடுஞ்சாலையில் பல்ஜித் சிங்கால், இந்த ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, பதான்கோட்டில் இருந்து ஜம்மு - காஷ்மீரை நோக்கி சென்ற ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரின் நடமாட்டத்தை பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு இணையதளம் வாயிலாக இவர் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள நபருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

பல்ஜித் சிங்கின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், துபாய் நபரிடம் இருந்து 40,000 ரூபாயை அவர் சமீபத்தில் பெற்றது உறுதியாகியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நம் நாட்டின் முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி ஹிந்து கோவில்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை படம்பிடித்து பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உளவாளிகள் பலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

Advertisement