கர்நாடக துணை முதல்வர் கருத்துக்கு முதல்வர் விஜய் ரியாக் ஷன் என்ன?

23


தஞ்சாவூர்: 'மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை' என, காங்., கட்சியை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரின் கருத்துக்கு, முதல்வர் விஜய் என்ன முடிவு எடுக்க போகிறார் என, டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

காவிரி நதி நீர் தமிழகத்தின் ஜீவாதாரம். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி விளங்கி வருகிறது.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆட்சியாளர்களுக்கும் முறையான அணுகுமுறை இல்லாத சூழலில், கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுமான பணி தொடங்க, மத்திய அரசிடம் அனுமதி வாங்கும் அளவுக்கு உறுதியாக உள்ளது.

இந்நிலையில், 'மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்திற்கு உரிமை இல்லை. தற்போது திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளோம். விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், உடனடியாக பூமி பூஜை நடக்கும்' என, கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது, டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநில அரசிடம், ராகுல், சோனியா போன்றவர்கள் மூலம், மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என, மவுனமாக இருந்து விட்டனர். இதன் விளைவாக கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது, காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சென்று, இரண்டு அமைச்சர்களையும் பெற்றுள்ளது. முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் நெருக்கம் காட்டும் சூழலில், மேகதாது விவகாரத்தில் விவசாயிகளுக்காக ராகுல் மூலம், கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண்பாரா?

கடந்த ஆட்சியாளர்களிடம் விவசாயிகள் முறையிட்டு ஒய்ந்து போன நிலையில், முதல்வர் விஜய், அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என, டெல்டா விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement