பாலியஸ்டர் நுால் விலை அதிகரிப்பால் பருத்தி நுாலிழை இறக்குமதி உயர்வு சர்வதேச சந்தையில் எதிர்பாராத திருப்பம் 

திருப்பூர்: பாலியஸ்டர் நுால் விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், போட்டி நாடுகள், இந்தியாவில் இருந்து பருத்தி நுாலிழை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது.

மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது; விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி குறைந்து, விலையும் உயர்ந்துள்ளது. பாலியஸ்டர் நுால் விலை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

வர்த்தக போட்டி நாடுகளான, வங்கதேசம், சீனா, வியட்நாமில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியே பிரதானம். இந்தியாவில், பருத்தி உற்பத்தியும், பருத்தி நுால் மற்றும் ஆடை உற்பத்தியும், 80 சதவீதம் நடக்கிறது. சர்வதேச சந்தைகளில், இந்தியாவின் பங்களிப்பை உயர்த்த வேண்டுமெனில், பாலியஸ்டர் நுாலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

எதிர்பாராத வகையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், பாலியஸ்டர் நுால் விலை, சர்வதேச சந்தையில், கிலோவுக்கு, 50 முதல், 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், நம் போட்டி நாடுகள், இந்தியாவில் இருந்து பருத்தி நுால் இறக்குமதி செய்வது அதிகரித்து, உள்நாட்டு தேவைக்கான பருத்தி நுாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “ரசாயனம், சாயம் விலை, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. நுால் விலையும் உயர்ந்ததால், நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

''வங்கதேசம், சீனா, வியட்நாமுக்கு, பருத்தி நுால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பாலியஸ்டர் நுால் விலை உயர்வால், போட்டி நாடுகளில், பருத்தி நுால் பயன்பாடு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு, பஞ்சு இறக்குமதிக்கான வரியை தற்காலிகமாக ரத்து செய்தால் மட்டுமே, நிலைமை சீராகும்” என்றார்.

 கச்சா எண்ணெய் விலை உயர்வால், பாலியஸ்டர் நுால் விலை, சர்வதேச சந்தையில், கிலோவுக்கு, 50 முதல் 60 ரூபாய் வரை உயர்வு

 போட்டி நாடுகளான வங்கதேசம், சீனா, வியட்நாம் ஆகியவை, இந்தியாவில் இருந்து பருத்தி நுால் இறக்குமதி செய்வது அதிகரிப்பு

Advertisement