பேரின்ப பெருவெள்ளத்தில் கலந்த சுவாமிகள்

திங்கள் தோறும் விண்ணில் முழுநிலவு உதித்து தன் அமுத கிரணங்களைப் பொழியும் பவுர்ணமி நன்னாள்... கருவடிக்குப்பத்தின் திறந்தவெளித் தோட்டம், நிலவின் வெண் வெளிச்சத்தில் தெய்வீகப் பொலிவோடு பிரகாசிக்கும். அங்கே கூடிநிற்கும் பக்தி வெள்ளத்திற்கு நடுவே, ஞானப் பேரொளியாய் வீற்றிருக்கும் குரு சித்தானந்த சுவாமிகள், ஆன்மாவை நெகிழச்செய்யும் ஞான உபதேசங்களை அமுதமாய் வாரி வழங்குவார்.அப்படி ஒரு மங்கலகரமான திருநாள்... துர்முகி ஆண்டு, பங்குனி திங்கள், பவுர்ணமி நன்னாளில் வழக்கம்போல் அடியவர் பெருமக்கள் அனைவரும் கூடி நின்றனர். சுவாமிகளின் திருவாக்கிலிருந்து உதிர்ந்த ஞான உபதேசங்களை, அங்கிருந்தோர் அனைவரும் தங்களை முற்றிலுமாக மெய்மறந்து, பக்திப் பரவசத்தோடு பருகிக் கொண்டிருந்தனர்.

அந்தப் புனித வேளையில், பரம்பொருளின் அவதாரமாய் விளங்கிய சுவாமிகள், தாம் இப்பூவுலகில் எடுத்த தபோநெறி வேலை நிறைவடைந்து வருவதையும், ஆதிசிவனின் திருவடி நீழலில் கலக்கும் மகா முகூர்த்தம் நெருங்கி வருவதையும் தன் அகக்கண்ணால் உணர்ந்தார். திடீரென அதுவரை பொழிந்த உபதேசத்தை நிறுத்தினார். அடுத்த கணம், எங்கும் ஒரு நிசப்தமான, தெய்வீக அமைதி நிலவியது. பக்தர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.அப்போது சுவாமிகள், தன் அண்மையில் நின்றுகொண்டிருந்த முதன்மைச் சீடரான முத்துக்குமாரசாமி பிள்ளையவர்களைத் தன் கருணைச் சைகையால் அருகில் அழைத்தார். தன் திருவாய் மலர்ந்து, பின்வரும் ஞான ரகசியத்தை அருள்வாக்காக மொழிந்தார்: யாம் வந்த வேலை முடிந்து வருகின்றது. இனி யாம் பரமத்துடன் ஐக்கியமாகப் போகிறோம். எதிர்வரும் ஏவிளம்பி வருடம், வைகாசி மாதம் 15-ம் தேதி (28.05.1837) இல் என் மண்ணுலக வாழ்வு முற்றுப் பெறுகின்றது. யாம் பரமானந்தத்தில் திளைக்கப் போகிறோம். இதனை அனைவருக்கும் தெரிவியுங்கள்.. என்றார். மகா சமாதி நாளை மாதங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனமாய் அறிவித்த இந்த அருள்மொழி, புதுச்சேரி மண் எங்கும் காட்டுத்தீயாய் பரவியது. அந்த நடமாடும் தெய்வத்தைக் கண் குளிரக் கண்டு தரிசிக்க, மகா ஜனங்கள் கூட்டம் கூட்டமாய், பக்திப் பெருக்கோடு அலைமோதி வந்தனர்.

சுவாமிகள் முன்கூட்டியே குறித்த அந்த வைகாசித் திங்கள் 15-ம் நாளுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிள்ளையவர்களிடமும், அன்பான தொண்டர்களிடமும், தமது மகா முக்தி நாளன்று செய்ய வேண்டிய மங்கலச் சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் ஒழுங்குபடுத்தி அருளினார். அவர்களும் கண்கள் பனிக்க, அதனை செய்து முடிப்பதாக ஒப்புக்கொண்டனர்.

நாட்கள் நகர நகர... அந்த ஞானப் பெருமானுக்குத் தங்களின் நன்றிக்காணிக்கையைச் செலுத்த, அடியவர்கள் அன்னாருக்கான அபிஷேக ஆராதனைப் பொருட்களைக் குவித்து வழிபடத் தொடங்கினர். காலத்தை வென்ற மகா யோகியான சுவாமிகளோ, எவ்விதச் சலனமும் இன்றி, எப்போதும் போல் தன் திருமுகத்தில் தவழும் புன்னகையுடனும், குளிர்ந்த பார்வையுடனும் பக்தர்களுக்குத் தொடர்ந்து அருள் ஆசிகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.முடிவில், அகிலமே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஏவிளம்பி ஆண்டின், வைகாசி மாதம் 15-ம் நாளும் (28.05.1837) விடிந்தது.சுவாமிகள் எவ்விதப் பதற்றமும் இன்றி, வழக்கம்போல் தமது நித்திய அனுஷ்டானங்களை முறைப்படி முடித்துக் கொண்டு, முத்தியால்பேட்டை சிங்காரத்தோப்பிற்கு எழுந்தருளினார். அங்கே கூடியிருந்த உத்தம பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் திருமலரடிகளுக்குக் கடைசி முறையாகப் பாத பூஜை செய்து, கண்ணீர் மல்க வழிபட்டனர். சுவாமிகள் எப்போதுமே அமரும் அந்தப் புனித ஆசனத்தில், புன்னகை பூத்த திருமுகத்துடன், கம்பீரமாய் வீற்றிருந்தார்.தாம் இம்மண்ணில் எடுத்த அவதார நோக்கம் முற்றுப்பெறும் அந்தப் பேரின்ப முகூர்த்த வேளை கூடிவருவதை சுவாமிகள் தன் சூட்சும உணர்வால் அறிந்தார். குழுமியிருந்த அடியவர் கூட்டம் அனைவராலும் போற்றப்படும் வண்ணம், தன் திருநோக்கால் அனைவருக்கும் இறுதி ஆசிகளை வழங்கினார்.அடுத்த விநாடி... மகா சமாதி நிலைக்குள் பிரவேசித்தார். நேராகப் பத்மாசனத்தில் அமர்ந்தார். உலகைக் காணும் தன் புறக்கண்களை மெல்ல மூடினார். பூத உடலின் ஒன்பது வாயில்களையும் முற்றிலுமாக அடைத்தார். ஆழமான தியானத்தில் ஆழ்ந்து, மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, அதனைச் சுழிமுனை நாடி வழியாகக் சஹஸ்ரார சக்கரத்திற்கு ஏற்றினார்.தன் தூய சித்தத்தினுள்ளே, பேரொளிப் பிழம்பாக விளங்கும் சிவலிங்கத்தைக் கண்டு, பேரின்பப் பெருவெள்ளத்தில் திளைத்தபடி, ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள் ஜீவ முக்தி பேறு பெற்றார். அவரது பூத உடல் நிலைபெற்றது. ஆனால் அவரது ஆன்மா பிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருள்ஜோதியாய் நிலைத்து நின்றது.

Advertisement