பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் அட்ராசிட்டி போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தை வட்டமிடும் ஆட்டோக்களின் அட்ராசிட்டியால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி நகரின் பிரதான சாலையான சேலம் - சென்னை - சங்கராபுரம் - கச்சிராயபாளையம் ஆகிய நான்கு சாலைகள் இணையும் நான்கு முனை சந்திப்பின் அருகே பழைய பஸ் நிலையம் உள்ளது.

இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் சிரமப்பட்டனர்.

இதனை தவிர்க்கும் வகையில் தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியதன் பலனாக கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் புறநகர் பஸ் நிலையம் கட்டி செயல்பட துவங்கியது. ஆனாலும் கள்ளக்குறிச்சியில் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் பிரதான சாலைகளில் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்பு மீதமுள்ள சாலையில், நீண்ட துாரத்திற்கு பைக்குகள், தள்ளுவண்டிகள் அணிவகுத்து நிறுத்துவதால், சாலையின் அகலம் மேலும் சுருங்கி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு சவால் விடும் வகையில், பழைய பஸ் நிலைய நுழைவு வாயில் மற்றும் வெளியே வரும் பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாதபடி ஆட்டோக்களை நிறுத்தி வைக்கின்றனர்.

வாகனங்கள் நிறுத்தக்கூடாது என போலீசார் அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும், அதனை ஆட்டோக்கள் சற்றும் பொருட்படுத்துவது கிடையாது. நோ பார்க்கிங் போர்டு அருகிலே நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கின்றனர்.

போலீஸ் உயரதிகாரிகள் பழைய பஸ் நிலையம் அருகில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement