குழந்தைகள் பாதுகாப்பு: எவரையும் நம்பாதீர் பெற்றோரே!

3

சூலுாரில் 10 வயது சிறுமியை இரு கயவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும், பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என, கோவை மக்களிடம் கேட்டோம்.

போதையே காரணம்



போதைப்பொருள் புழக்கம்தான் இதுபோன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணம். யாரை நம்புவது என தெரியவில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சிறுமியை இவ்வளவு வக்கிரமாக கொலை செய்தவனுக்கு, துாக்கு தண்டனை அளித்தால் தான், இதுபோல இனி யாரும் துணிய மாட்டார்கள்.

- கிருஷ்ணவேணி, நஞ்சுண்டாபுரம் ரோடு.

கடுமையான தண்டனை



இந்த மாதிரி மனிதர்களுக்கு நடுவில்தான் வாழ்கிறோம் என நினைத்தால் பதற்றமாக இருக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுக்க, செய்த தவறை வருந்தும் அளவுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும். உடனே தீர்ப்பளித்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். அரசு நம்மை பாதுகாக்கிறது என நினைக்க தோன்றும்.

- சாரதா, ஒலம்பஸ்.

தைரியம் கற்றுக்கொடுக்கணும்



இந்த காலத்திற்கு ஏற்ப பெற்றோர்தான் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்காப்பு கலைகள், தைரியத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் நடமாடும் நபர்களின் பின்னணியை விசாரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரேமா, புலியகுளம்

போதை கலாசாரம்



ஒழிக்கணும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் ஆண்கள் குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். போதை பழக்கத்தை முற்றிலும் ஒழித்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அருக்காணி, அம்மன்குளம்

சென்சார் அமைப்பு



இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். ஒரு பாடத்திட்டமாகவே கொண்டு வரலாம். குறைந்தபட்ச தற்காப்பு முறையாவது கற்பிக்க வேண்டும். பொது இடங்களில் சிறார்கள் ஆபத்தில் சிக்கி இருப்பதை, அவர்களின் ஒலியை வைத்து உணரும் சென்சார் போன்ற அமைப்பை அரசு உருவாக்கி நிறுவலாம்.

- சுச்சரிதா, ரேஸ்கோர்ஸ்

அம்மாக்கள் கவனம்



பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் அம்மாக்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற செயல்களை தடுக்க, தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காமராஜ், மதுக்கரை

மிருகங்கள் வாழும் கலியுகம்



பிஞ்சு குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல், கொடூரமாக கொலை செய்யும் மிருகங்கள் வாழும் கலியுகம் இது. போதையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது; அவர்கள் மனிதர்களே கிடையாது. எனவே, நம் பிள்ளைகளை நாம்தான் நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டு விடாதீர்கள்.

-குணசுந்தரி,நெசவாளர் காலனி.

மதுக்கடைகளை மூடணும்



மது, கஞ்சாதான் எல்லா பிரச்னைக்கும் காரணம். அரசு போதை கலாசாரத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் போதை தடுப்பு விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்; தினமும் உறுதிமொழியாகக்கூட வைக்கலாம்.

-கண்ணன், சிங்காநல்லுார்.

போதைக்கு முற்றுப்புள்ளி



போதையே அடிப்படை காரணம். அதிலிருந்து மீண்டால் மட்டுமே அனைத்து குற்றங்களையும் தடுக்கமுடியும். பாலியல்ரீதியாக துன்புறுத்தல்களை தடுக்க முடியும். அதற்கு டாஸ்மாக் கடைகளுக்கென்று கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். போதை வஸ்துக்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

- ஸ்ரீ ஹரி, செல்வபுரம்

சவூதியை போல் தண்டனை



இது போன்ற கயவர்களை சவூதி நாடுகளைப் போல் தண்டிக்க வேண்டும். அப்போதுதான்பிறருக்கு பயம் வரும். பெண் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோருக்கு தெரியாமல் எங்கேயும் செல்லக்கூடாது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

- மேகலதா, டி.வி.எஸ்.நகர்

கிராமங்களில் கவனம்



பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது போன்ற சம்பவங்களை காண்பித்து, எச்சரிக்க வேண்டும். பள்ளி சென்ற குழந்தை வீடு திரும்பி வரும் வரை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் பெண் குழந்தைகள் மீது அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்.

- தஞ்சை தமிழ்வாணன், சூலுார்

சுய பாதுகாப்பு கல்வி



பெண் ஆசிரியர்கள் ஐந்து முதல் 10 வயது வரை உள்ள மாணவிகளுக்கு 'குட் டச்' ,'பேட் டச்' பற்றி அவசியம் சொல்லி கொடுக்க வேண்டும். அவ்வப்போது நடக்கும் இது போன்ற சம்பவங்களை வகுப்பறையில் விளக்கி பெண் குழந்தைகளை விழிப்புடன் இருக்க சொல்ல வேண்டும். சுய பாதுகாப்புக்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

- இளங்கோவன், வீரகேரளம்

பயம் வர வேண்டும்



இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு, உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு பயம் வந்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குழந்தைகள் தாயை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது என்பதை, ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும்.

- அஜித், புதுப்பாளையம்

Advertisement