தேசிய ஹாக்கி போட்டியில் சுதப்பல்: தமிழ்நாடு அணி மீண்டும் தோல்வி
சென்னை: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்து வரும் தேசிய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி மீண்டும் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி தந்துள்ளது.
கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து, 15வது லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை தேசிய ஹாக்கி போட்டியை, கோவில்பட்டியில் உள்ள மைதானத்தில் நடத்தி வருகின்றன.
வருமான வரித்துறை, டில்லி ஏர்போர்ஸ் அணி, ஜம்ஷெட்பூர் நேவல் டாடா உட்பட நாட்டின் 16 முன்னணி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை 6:30 மணிக்கு நடந்த ஒன்பதாவது லீக் போட்டியில், நியூ டில்லி காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய நியூ டில்லி அணி, 6 - 1 என்ற கோல் கணக்கில், தமிழ்நாடு அணியை வீழ்த்தியது.
அப்கரண் சுதேவ் என்பவர் இரு பீல்டு கோல், டிராஸ் ஒரு பெனால்டி கார்னர், முதாகர் ஹரிஷ் சோமப்பா இரு பீல்டு கோல், ஷா தலேப் ஒரு பீல்டு கோல்கள் அடித்தனர். ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணிக்காக பிருத்வி, பெனால்டி கார்னரில் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியிடம் 5 - 1 என்ற கோல் கணக்கில், தமிழ்நாடு அணி தோல்வி அடைந்திருந்தது.
தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும், ஒரே ஒரு கோல் மட்டுமே, தமிழ்நாடு அணியால் அடிக்க முடிந்துள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணிக்கு கூடுதல் பயிற்சி தேவையோ என சந்தேகம் எழுந்துள்ளது.