குடிநீர் வினியோகம் தொய்வு லோயர்கேம்ப் மக்கள் அவதி

கூடலுார், மே 26–-

கூட்டுக் குடிநீர் திட்டம் அமைந்துள்ள லோயர்கேம்பில் குடிநீர் வினியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.

லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கூடலுார் நகராட்சியின் 21வது வார்டாக உள்ள லோயர்கேம்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த இரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேரடியாக ஆற்றில் சென்று தண்ணீரை எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். குளோரினேசன் செய்யாத நீரை பயன்படுத்துவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 240 கன அடி நீர் திறக்கப்பட்டும் தலை மதகுப்பகுதியான முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதியில் உள்ள லோயர்கேம்பில் குடிநீர் வினியோகம் இல்லாதது வேதனையளிப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement