கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்

பாலக்காடு: கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் கடந்த, 18 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

யாகச்சாரியார் சுவாமிநாத சிவாச்சாரியார், கோவில் தந்திரி ரத்ன சபாபதி சிவாச்சாரியார் மற்றும் முக்கிய புரோகிதர் பிரபுதேவா சேனாபதி சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வேதபாராயணம், திருமுறை பாராயணம், அஷ்டம கால யாகபூஜை, மூலமந்திர ஹோமம், திரவ்யாஹுதி, பிராயச்சித்த ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம் கொண்டு வரப்பட்டன.

காலை, 6:30 மணிக்கு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சன்னதி மற்றும் பரிவார தேவதைகளின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை, 7:30 மணிக்கு தசதரிசனம், 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ​மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை, ​5:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க யானை அணிவகுப்புடன் சீவேலி நடந்தது. ​இரவு, உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வரும் வைபவத்துடன் கும்பாபிஷேக விழா நிறைவடைந்தது. கோவிலின் கோபுரங்களின் மேல் பிரதிஷ்டை செய்வதற்கான புனிதக் கலசங்களை காஞ்சி காமகோடி ஆதிசங்கர பீடம் உபயமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement