வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் தீப்பற்றி எரிந்த கார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே செவிலிமேடில் வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் நேற்று திடீரென தீப்பற்றிய கார் முழுதும் எரிந்து எலும்புக் கூடானது.

காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பெட்ரோல் பங்க் எதிரில் வாகனங்கள் பழுது பார்க்கும் கடை உள்ளது. இங்கு நேற்று, காலை 11:00 மணியளவில், 'டாடா சுமோ' காரின் கதவுப் பகுதியில் கடை ஊழியர், 'வெல்டிங்' வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பற்றிய தீ, காரின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து ஊழியர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்து எலும்புக்கூடானது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement