மேற்கு வங்கம் பால்டா தொகுதியில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், பால்டா சட்டசபை தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா, 1 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கத்தில் உள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்., 23 மற்றும் 29ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

முறைகேடு புகாரின்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா தொகுதியில், இம்மாதம் 21ம் தேதி மறு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஓட்டு எண்ணிக்கை 24ல் நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

பால்டா தவிர்த்து மீதமுள்ள தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், கடந்த 4ல் எண்ணப்பட்டன. இதில், 207 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் முதல் பா.ஜ., முதல்வராக பதவியேற்றார்.

மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட பால்டா தொகுதியில், பா.ஜ., சார்பில் தேபாங்ஷு பாண்டா போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த திரிணமுல் காங்., வேட்பாளர் ஜஹாங்கீர் கான், கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த சூழலில், பால்டா தொகுதியில் கடந்த, 21ல் மறு தேர்தல் நடந்தது. இதில், 87 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்நிலையில், பால்டா தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.

தொடக்கம் முதலே, பா.ஜ., வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா முன்னிலை வகித்தார். முடிவில், தனக்கு அடுத்ததாக வந்த மார்க்.கம்யூ., வேட்பாளர் சம்புநாத் குர்மியை விட, 1.09 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றி பெற்றார்.

காங்., வேட்பாளர் அப்துல் ரசாக் மொல்லா மூன்றாவது இடத்தையும், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த திரிணமுல் காங்., வேட்பாளர் ஜஹாங்கீர் கான் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து சட்டசபையில் பா.ஜ.,வின் பலம், 208ஆக உயர்ந்துள்ளது.

Advertisement