மழைநீர் கால்வாய் அமைப்பதில் அலட்சியம் மர்ம காய்ச்சலால் பெண் பாதிப்பு

திருத்தணி: திருத்தணி குமரன் நகரில், மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு பள்ளம் தோண்டி மூன்று மாதங்களாகியும் பணிகள் துவங்காததால், தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தியாகியுள்ளது. கொசு கடியால் பெண் ஒருவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திருத்தணி குமரன் நகரில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மழைநீர் செல்வதற்கு கால்வாய் வசதியில்லாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், குமரன் நகரில் மூன்று மாதங்களுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால், பள்ளம் தோண்டி மூன்று மாதங்களாகியும் பணிகளை துவக்காததால், மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளத்தில் தேங்கியுள்ளது. இதனால், பள்ளத்தில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களை கடிப்பதால், நிம்மதியாக துாங்க முடியவில்லை.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், குமரன் நகரில் வசிக்கும் கலா, 35, என்ற பெண், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement