'ஸ்மார்ட் சிட்டி' பணியில் குளறுபடி களைய அதிரடி காட்டுவாரா முதல்வர்? கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் வீண்; உயர்மட்ட ஆய்வுக்கு வலுக்கும் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல நுாறு கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதியில், பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் பலவும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகிக் கிடக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் முடங்கிக் கிடக்கும் இந்த விவகாரத்தில், உடனடியாக உயர்மட்ட ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை வலுத்துள்ளது.



மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' (பொலிவுறு நகரம்) திட்டத்தின் கீழ், முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களில் திருப்பூரும் இடம் பிடித்தது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்போடு, பல்வேறு அத்தியாவசியத் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.

நகரின் மையப்பகுதியான நொய்யல் நதிக்கரையை அழகுபடுத்தி, இருபுறமும் சாலைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க 160 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதன் அருகிலேயே 13 கோடி ரூபாயில் பன்னடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கட்டப்பட்டது.

டவுன்ஹால் பகுதியில் 55 கோடி ரூபாயில் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம், காமராஜ் ரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட்டை 40 கோடி ரூபாய் செலவில் நவீன வளாகமாக மாற்றுதல், அதன் அருகே 19 கோடி ரூபாயில் மற்றொரு பன்னடுக்கு வாகன பார்க்கிங் எனப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

பி.என். ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு, பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை மற்றும் மீன் மார்க்கெட் வளாகங்கள் எனப் பட்டியல் நீண்டது.

நகரின் முக்கியச் சாலைகள் அனைத்தும் கான்கிரீட் தளம், புதை மின் வடம், எல்.இ.டி விளக்குகள் மற்றும் சோலார் மின் உற்பத்திப் பேனல்களுடன் நவீன 'ஸ்மார்ட் ரோடுகளாக' மாற்றப்பட்டன.

காகிதத்தில் 'ஸ்மார்ட்' களநிலவரமோ 'கலவரம்' திட்டங்கள் என்னவோ காகிதத்தில் 'ஸ்மார்ட்' ஆக இருந்தன; ஆனால், கள நிலவரமோ படுமோசமாக உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிகளைக் கொட்டி அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலைகள் அனைத்தும், தரம் குறைந்த காரணத்தால் தற்போதே பெயர்ந்து, ஜல்லிகளும் கம்பிகளும் வெளியே நீட்டிக்கொண்டு மரணக் குழிகளாகக் காட்சியளிக்கின்றன.

முடங்கிய கோடிகள் 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட டவுன்ஹால் மாநாட்டு அரங்கம், அப்போதைய துணை முதல்வர் திறந்து வைத்ததோடு சரி! இன்றுவரை முறையாக ஏலம் விடப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. அதேபோல, காமராஜ் ரோடு மாநகராட்சி தினசரி மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஏலம் விடப்படவில்லை. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

'ஐ.எஸ்.ஓ.' தரச்சான்று பெறத் திட்டமிடப்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்ட், இன்று முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல், பய ணிகள் கால் எடுத்து வைக்கக்கூட முடியாத அளவுக்குச் சகதிக் காடாகவும், சமூக விரோதிகளின்கூடாரமாகவும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

முதல்வருக்குக் கடிதம் நல்லுார் நுகர்வோர் நல மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

மக்களின் பல நுாறு கோடி ரூபாய் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் வீணாவதை வேடிக்கை பார்க்க முடியாது. தினசரி மார்க்கெட்டை நம்பியிருந்த பல வியாபாரிகள், வாழ்வாதாரம் இழந்து தங்களின் தொழிலையே மாற்றிக் கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சாலைகளின் தரம் மிக மோசமாக உள்ளது. எனவே, இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகளையும் உயர்மட்டக் குழு அமைத்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வீணாகக் கிடக்கும் கட்டடங்களை உடனடியாக ஏலம் விட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக, தமிழக முதல்வருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் திருப்பூரின் அடையாளமே சிதைந்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக முதல்வர் 'ஸ்மார்ட் சிட்டி' விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement