களத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள்!

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தலில் திருப்பூர் மாவட்டத் தொகுதிகளில் இந்த முறை புதுமுகங்களுக்கு மக்கள் பெருமளவில் வாய்ப்பளித்துள்ளனர். புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், தங்கள் தொகுதிகளில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பு இதோ:

கள ஆய்வில் தெற்கு எம்.எல்.ஏ.

திருப்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ. பாலமுருகன், த.வெ.க. மாநகர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பில் உள்ளவர். பனியன் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருவதால் தொழிற்துறையினர் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் இவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது.

செயல்பாடுகள்: தேர்தல் முடிவுகளுக்குப் பின் சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்த இவர், ஊர் திரும்பியதும் உடனடியாகத் தொகுதிக்குள் சென்று பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கத் தொடங்கினார். தொடர்ந்து, மாநகராட்சி பகுதியில் புதிய மேம்பாலப் பணிகள் மற்றும் சாலைப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிகளிடம் வசதிகள் மற்றும் மருத்துவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். திருப்பூரின் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

அதிகாரிகள் சந்திப்பு: தொகுதிக்குள் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிகள் முழுமையாக முடிந்த பின்னரே, மக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளைத் தொகுத்துக் கொண்டு கலெக்டர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளைச்ச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பு: தெற்கு தொகுதிக்கான புதிய எம்.எல்.ஏ. அலுவலகக் கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் சாமுண்டிபுரத்தில் உள்ள இவரது இல்லத்திற்கும், கட்சி அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது; அலுவலகத்தை விரைந்து திறக்க வேண்டும். மேலும், எம்.எல்.ஏ. ஆய்வுக்குச் செல்லும்போது கட்சியினர் ஆர்வ மிகுதியால் அவரைச் சூழ்ந்து கொள்வதால், பொதுமக்கள் அவரை நெருங்கி மனுக்களைக் கொடுக்க முடிவதில்லை. இந்தத் தொண்டர்கள் நெருக்கடியைத் தவிர்த்து, மக்கள் தங்களை எளிதில் அணுக வழிவகை செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை.

பல்லடம் எம்.எல்.ஏ. மிகுந்த எதிர்பார்ப்பு

பல்லடம் தொகுதியில் இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்பி, இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, த.வெ.க. வேட்பாளர் ராம்குமாரை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்துள்ளனர். தொகுதி மக்களுக்கு இவர் புதிய முகம் என்றாலும், மக்கள் அளித்த மாபெரும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு இவருக்கு ஏற்பட்டுள்ளது.

செயல்பாடுகள்: பல்லடத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தற்போது இவரும் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பு: பல்லடம் வட்டாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு, குப்பைக் கழிவுகள் மேலாண்மை, போக்குவரத்து நெரிசல் மற்றும் விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி உற்பத்தி, கல்குவாரி உள்ளிட்ட தொழில் துறையினரின் கோரிக்கைகளும் ஏராளமாக உள்ளன.

எனவே, எம்.எல்.ஏ. அவர்கள் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொறுப்பேற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை உடனடியாகத் திறந்து, மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் ஒரு முறையை உருவாக்கினால், வாக்களித்த மக்களுக்கு ஆட்சி மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படும்.

தாராபுரம் எம்.எல்.ஏ. விரைவில் வருவாரா?

தாராபுரம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011-ல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பொன்னுசாமியின் மனைவி என்ற பலம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவி போன்ற செல்வாக்குகளுடன் களம் கண்ட இவர், தி.மு.க.வை விட 16,727 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

செயல்பாடுகள் : வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இணைந்து செயல்படும் இவர், தற்போதைய அரசியல் சூழலில் த.வெ.க.வினருடன் நட்பு பாராட்டி வருகிறார். எனினும், தேர்தல் வெற்றி பெற்ற நாளில் இருந்து இன்னும் தொகுதிக்குள் களமிறங்கவில்லை. அவர் சென்னையில் இருக்கிறாரா அல்லது உள்ளூரில் உள்ளாரா என்று தெரியாமல் கட்சியினரே குழப்பத்தில் உள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பு : தேர்தல் களத்தில் குடிநீர், சாலை வசதிகள், விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்கக் குளிர்சாதனக் கிடங்கு, நெசவு மற்றும் சிறுதொழில் மேம்பாடு எனப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தார். உள்கட்சிக்குள்ளே நிலவும் பிளவுகள் மற்றும் அரசியல் நகர்வுகளைக் கடந்து, எம்.எல்.ஏ. அவர்கள் உடனடியாகத் தொகுதிக்கு வந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகளை அணுகி முதல்கட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே தாராபுரம் மக்களின் எதிர்பார்ப்பு.

காங்கயம் எம்.எல்.ஏ. பயணத்தில் தீவிரம்

காங்கயம் தொகுதியில், 'விசில்' சத்தத்தையும் மீறி, அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜ் உள்ளூர்க்காரர் என்ற பலத்தோடு இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

செயல்பாடுகள்: அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினை காரணமாகப் பதவியேற்பு விழா வரை வெளியூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், இவரால் நன்றி அறிவிப்பு கூட்டங்களுக்கு உடனடியாகச் செல்ல இயலவில்லை. தற்போது வேலுமணி அணியில் இருக்கும் இவர், பெரும்பாலும் சென்னையிலேயே இருந்ததால் காங்கயம் வந்த போது முக்கிய ஆதரவாளர்களை மட்டுமே சந்தித்துள்ளார். தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகுதான் திட்டங்கள் மற்றும் தொகுதி வளர்ச்சி நிதி வரும்; அதற்குப் பிறகே தொகுதியில் மக்கள் பணி வேகமெடுக்கும் என இவரது கட்சியினர் கூறுகின்றனர்.

விளக்கம்: தேர்தல் வாக்குறுதியாகக் கூறிய அனைத்தையும் நிறைவேற்றப் பாடுபடுவேன்; கட்சி வேறுபாடு இல்லாமல் பொதுமக்களுக்குப் பணிகளைச் செய்து கொடுப்போம். அவசர வேலையாகச் சென்னை சென்றுவர வேண்டியுள்ளதால், அடுத்த வாரத்தில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நன்றி அறிவிப்புப் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று எம்.எல்.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணியில் வடக்கு எம்.எல்.ஏ.

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில், முன்னாள் எம்.பி. சத்தியபாமா (த.வெ.க.) 'மாஜி' அமைச்சர் ஆனந்தனை வீழ்த்தி, 69 ஆயிரத்து 992 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் கோட்டையைத் தகர்த்து வெற்றி வாகை சூடியிருக்கிறார். செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர் என்பதால் இவரை 'வருங்கால அமைச்சர்' என்றே கட்சியினர் வாழ்த்தி வந்தனர்.

செயல்பாடுகள்: அவிநாசி எம்.எல்.ஏ. கமலி அமைச்சராகிவிட்டதால், இவருக்கு தற்போதைக்கு அமைச்சராகும் வாய்ப்பு இல்லையே என்ற வருத்தம் வடக்கு தொகுதியில் இருந்தாலும், இவர் தனது மக்கள் பணியை விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்திய குமார்நகர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கணபதி ஹோமம் நடத்தி, அதன் பயன்பாட்டை முறைப்படி துவக்கிவிட்டார். திருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் இவர் மூலமாகவே த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பு: வடக்கு தொகுதியில் மாநகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்று முதற்கட்டமாக நன்றி அறிவிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டார். இவரது ஆதரவாளர்கள் நன்றி அறிவிப்பு 'ரீல்ஸ்' வெளியிட்டு சமூக வலைதளங்களில் அமர்க்களம் செய்து வருகின்றனர். வாக்காளர்களை வாஞ்சையுடன் அணுகி நலம் விசாரிப்பது, 'செல்பி' மற்றும் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என 'எளிதில் அணுகக்கூடிய எம்.எல்.ஏ.' என்ற நற்பெயருடன் மக்கள் பணியைத் தொடங்கியுள்ளார். தேர்தல் களத்தில் இவர் அளித்த வாக்குறுதிகள் பெரிய அளவில் வெளியே தெரியாவிட்டாலும், மக்களின் தேவைகளை இவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று வடக்கு தொகுதி மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement