ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல செயல்திட்டம் அமைச்சர் ஆதவ் உறுதி

சென்னை: ''ஒலிம்பிக் போட்டிகளில், தமிழக விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் வெல்ல, செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன,'' என, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது:

ஒலிம்பிக் போட்டிகளில், தமிழக விளையாட்டு வீரர்கள் பதக்கங்கள் வெல்ல, செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், ஹாக்கி உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளில் மட்டுமே பதக்கங்கள் பெற்றுள்ளனர். தனிநபர் போட்டிகளில், இதுவரை பதக்கங்கள் பெறவில்லை.

இனிவரும் காலங்களில், இந்த நிலையை மாற்றி, ஒலிம்பிக் போட்டிகளில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள், அதிகளவில் பங்கேற்று, தனிநபர் பிரிவுகளிலும், பதக்கங்கள் வெல்லும் வகையில், தொலைநோக்கு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை, நோக்கமாக வைத்து, அதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பணியாளர்கள் இடம் பெறும், 'வாட்ஸாப்' குழு அமைக்கப்பட உள்ளது. வரும் 2028 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, தேவையான உதவிகளை வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement