வண்டல் மண் எடுப்பதில் நடந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி கலெக்டர்கள் கிடுக்கிப்பிடியால் ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்

சென்னை: 'தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில், தாசில்தாரிடம் அனுமதி பெற்று, எவ்வித கட்டணமும் இல்லாமல், வண்டல் மண் எடுத்துச் செல்லலாம்' என, அரசு உத்தரவிட்டதால், இதில் வசூல் பணியில் இருந்த ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில், 40,000 ஏரி, குளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன், இவற்றை துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோருக்கு, நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் தேவைப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில், விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோர், 'ஆன்லைன்' முறையில் அனுமதி பெற்று, வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், 'ஆன்லைன்' முறையில் அனுமதி பெற்றாலும், அனைத்து மாவட்டங்களிலும், நீர் நிலைகளில் மண் எடுக்க, பழைய ஒப்பந்ததாரர்கள் இருந்தனர். அவர்கள் தங்களிடம் குறிப்பிட்ட தொகையை, கட்டணமாக கொடுத்தால் தான், மண் எடுத்து தருவோம் எனக்கூறி வசூலில் ஈடுபட்டனர். இதனால், அரசு அனுமதித்தும், மக்கள் பணம் செலுத்தியே வண்டல் மண் பெறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஆட்சி மாறிய நிலையில், தாசில்தார்களிடம், 'ஆன்லைன்' முறையில் அனுமதி பெற்று, மக்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என, அனுமதி வழங்கப்பட்டது. 'இ - சேவை' இணையதளத்தில், இதற்காக விண்ணப்பித்தால் போதும். 10 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த முறை, மண் அள்ளிப்போடும் பணிக்கு, ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி. பாலமுருகன் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வண்டல் மண் எடுக்கும் விவகாரத்தில், ஒப்பந்ததாரர்களின் வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள், தங்கள் தேவைக்கான வண்டல் மண்ணை, தாசில்தாரின் அனுமதி அடிப்படையில் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தனியார் ஒப்பந்ததாரர்கள் தலையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வசூல் ஒப்பந்ததாரர்கள் வெளியேறி உள்ளனர். அரசு அறிவித்தபடி, மக்களுக்கு இலவசமாக, மண் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதேபோல, கிராவல் மண், ஆற்று மணல் விவகாரத்திலும், ஒப்பந்ததாரர்கள் வசூலுக்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் முறைகேடுகள் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement