புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு

சென்னை: கடலுாரில் புளியமரக்கிளை முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் உடைந்தன.

கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சிப் பகுதியில், 11 கே.வி., உயரழுத்த மின்தடம் கடக்கிறது. இங்குள்ள வீடுகள், விவசாய பயன்பாடு ஆகியவற்றுக்கு, இத்தடம் மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில், மின்தட பாதை பகுதியில், பழமையான புளியமரம் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் மரத்திற்கு தீவைத்ததால், குறிப்பிட்ட பாகம் தீக்கிரையாகி, பலமிழந்து காணப்பட்டது. இருப்பினும், அப்பகுதியினர் மரத்தை அகற்றாமலேயே இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன், மரத்தின் கிளை முறிந்து விழுந்து, இரண்டு மின் கம்பங்கள் உடைந்தன.

அதனால், அப்பகுதியில் இரண்டு நாட்களாக மின் வினியோகம் தடைபட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கூவத்துார் மின் வாரியத்தினரிடம் வலியுறுத்தி, நேற்று முன்தினம் புதிய மின் கம்பங்கள் நடப்பட்டதால், மின்சார வினியோகம் சீரானது.

Advertisement