78 நாளுக்கு கச்சா எண்ணெய் இருப்பு; பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் தகவல்

புதுடில்லி: நம் நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு அடுத்த 78 நாட்களுக்கு இருப்பதால், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை' என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்காசிய போர் பதற்றத்தால் கடல்சார் வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் குறித்து போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசார துறைகளின் பார்லி., நிலை குழு கூட்டம் நடந்தது.

இதில் உறுப்பினர்களாக உள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாட்டின் ஒரு சில பகுதிகளில் ரேஷன் முறையில் பெட்ரோலிய பொருட்கள் வினியோகிப்பது குறித்தும், ஒரு சில இடங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

மேலும், மேற்காசிய போர் நீண்ட நாட்களுக்கு தொடரும் என தெரிந்திருந்தும், தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு ஏன் முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், 'தற்போதைய சூழலில், நம் நாட்டில் 78 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. எனவே, தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை' என கூறினர்.

மேலும், 'மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், மேற்காசியாவில் நிறுத்தப்பட்டிருந்த 37 இந்திய கப்பல்களில் பெரும்பாலானவை, நம் நாட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் 13 இந்திய எண்ணெய் கப்பல்கள் மட்டுமே தற்போது அப்பகுதியில் சிக்கி இருக்கின்றன. போர் எப்போது முடியும் என்ற நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், தட்டுப்பாடு வராமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது' என தெரிவித்தனர்.

வரவிருக்கும் காரிப் பருவத்தை சமாளிக்கும் வகையில், உரங்களின் கையிருப்பும் போதிய அளவுக்கு இருப்பதாக பார்லி., நிலைக் குழு உறுப்பினர்களிடம் மத்திய உர அமைச்சக அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

Advertisement